சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் பேசிய தெலுங்கு மூத்த நடிகர் ராஜேந்திர பிரசாத் மறைந்த நடிகர் காந்தாரா குறித்து பெருமிதமாக பேசினார். அப்போது காந்தாரா கத்தி சண்டை போடுவதில் மிகுந்த வல்லவர். காந்தாரா பெயரை சொன்னாலே எம்ஜிஆர் பயந்து நடுங்குவார் என்று பேசியிருந்தார். இது பெரிய அளவில் கண்டனத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் பொதுச் செயலாளர் விஷால் உள்ளிட்ட பலரும் நடிகர் ராஜேந்திர பிரசாத் பேச்சுக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்திருந்தனர். இதற்கு மனப்பூர்வமாக ராஜேந்திர பிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் நாசர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் நடிகர் ராஜேந்திர பிரசாத் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, வணக்கம். நான் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத். 2 நாட்களுக்கு முன்னால் நடந்த ஒரு விழாவில் பழைய நடிகர் காந்தாரா பெயரில் எனக்கு ஒரு விருது கொடுத்தார்கள். அந்த விழாவில் நான் ஜாலியாக பேசும் போது தமிழ் சினிமா கடவுள் எனக்கு அவர் அப்படிதான்.
தமிழ் சினிமா கடவுள் எம்ஜிஆர் குறித்து தவறுதலாக ஒரு வார்த்தை வந்துவிட்டது. அதை வந்து யார் செய்தார்கள் என்று தெரியாது. இப்போது பெரிது பண்ணிவிட்டார்கள். நான் அப்படி ஒண்ணும் திட்டமிட்டு பேசவில்லை. நான் அப்படி பேசுவேனா? அவ்வளவு தைரியம் எனக்கு இருக்குதா?
மதராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட்டுல நான் படிக்கும் போது அவர்தான் சிஎம். அவர் வந்து நாங்க எல்லாம் எப்படி ஆக்டிங் கத்துக்கிறோம்ன்னு வந்து பார்த்திருக்கிறார். அவரை சொல்கிற அளவுக்கு நான் இல்லை. இருந்தாலும் அப்படி மிஸ் ஆகி வந்த ஒரு பேச்சுல நீங்க யாராவது பீல் பண்ணியிருந்தால் என்னை மன்னிச்சிக்குங்க என்று கேட்டுகிறேன்.
இனிமேல் வாழ்க்கையில் எப்பவுமே நான் அந்த மாதிரி பேச மாட்டேன். இதை நான் உங்களுக்கு உறுதியாக சொல்கிறேன். இந்த தப்பை இந்த வாட்டி மன்னிச்சிடுங்க. இதோடு இதை விட்டுடுங்க என்று கையெடுத்து கும்பிட்டபடி அந்த வீடியோவில் நடிகர் ராஜேந்திர பிரசாத் பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





