இன்று தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தளபதி விஜய். தனக்கே உண்டான ஆக்சன் காட்சிகள், அசத்தலான நடனம், இயல்பான நகைச்சுவை என அத்தனையும் ஜனரஞ்சகமாக கொடுப்பதால், விஜய்க்கு என்று தனி மார்க்கெட் இந்திய சினிமாவில் உள்ளது. அவர் நடிப்பில் வெளிவர இருக்கும் லியோ திரைப்படம், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வசூலை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி புகழின் உச்சியில் இருக்கும் தளபதி விஜய், வெள்ளித்திரையில் நாளைய தீர்ப்பு என்னும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரே இயக்கினார். இதன்பிறகு ரசிகன், தேவா, ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு என அனைத்து திரைப்படங்களையும் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்க, அந்தப் படங்கள் கலவையான விமர்சனத்தையே பெற்றன.
அந்த சமயத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த விஜய்க்கு, பூவே உனக்காக திரைப்படம் மிகப்பெரிய திருப்பு முனையை கொடுத்தது. தொடர்ந்து காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படங்கள் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றார் விஜய்.

ஆரம்பத்தில் தோல்வி படங்களை மட்டுமே தந்து கொண்டிருந்த விஜய்க்கு, பிற்காலம் பொற்காலமாக அமைய இன்று தளபதியாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். இந்த நிலையில், நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிர்வாகியுமான ராஜேந்திரன் நடிகர் விஜய் பற்றியும், விஜயகாந்த் அவருக்கு செய்த உதவி பற்றியும் வெளிவராத சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள அவர் பேசுகையில், “நாளைய தீர்ப்பு படம் வெளியானபோது, அது மக்களால் வரவேற்பைப் பெறவில்லை. இதனால் நடிகர் விஜயின் குடும்பம் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் கடனில் சிக்கி தவித்தது. ஒன்று வீட்டை விறறு கடனை அடைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் மீண்டும் ஒரு படம் எடுத்து கடனை தீர்க்க வேண்டும் என்ற கட்டாயத்தில் விஜயின் குடும்பத்தினர் இருந்தனர்.
அந்த சமயம் விஜயகாந்த் நடிப்பில் கேப்டன் பிரபாகரன் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. கேப்டன் புகழின் உச்சியில் இருந்த போது அவரை சந்தித்த எஸ் ஏ சந்திரசேகர், செந்தூரப்பாண்டி படத்தின் கதையை கூறி அதில் தனது மகன் நடிக்க இருப்பதாக தெரிவித்தார். படத்தில் விஜயகாந்தை விட விஜய்க்கே அதிக ஆக்சன் காட்சிகள் இருக்கும். விஜயகாந்த் இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருக்க, விஜய் சண்டை போடும் காட்சிகளும் இடம் பெற்றன. கேப்டன் அந்த படத்தில் நடித்ததால்தான் படம் நல்ல வசூலை பெற்று அவர்களது கடனை அடைக்க முடிந்தது. இப்படி விஜய் கடனில் சிக்கி தவித்த போது அவரைக் காப்பாற்றியவர் தான் விஜயகாந்த்” என்று கூறியிருக்கிறார். ராஜேந்திரனின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.





