எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்குப் பிறகு விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்னும் சிறிய கதாபாத்திரத்தில் சூர்யா நடித்தார். ஆனால் இதன் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருந்தது. வெறும் பத்து நிமிடங்கள் அவர் வந்து போனாலும், அந்தக் கதாபாத்திரத்தை பற்றி பேசாத ஆட்களே இருக்க முடியாது என்ற நிலை இணையத்தில் ஏற்பட்டது.
இதன்பிறகு அவர் ஒப்புக்கொண்ட திரைப்படம் தான் கங்குவா. ஏற்கனவே அண்ணாத்த என்னும் படுதோல்வி திரைப்படத்தை கொடுத்த சிறுத்தை சிவா உடன் தைரியமாக கைகோர்த்து, பிரம்மாண்ட திரைப்படத்தில் அவர் நடித்தார். கிட்டத்தட்ட இதன் படப்பிடிப்பு மட்டும் ஓராண்டு நடைபெற்றது. சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இதனை தயாரித்தது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்.
பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. ஆனால், படத்தில் ரிசல்ட் ஒட்டுமொத்த சூர்யா ரசிகர்களையும் அதிருப்தியில் ஆழ்த்தியது. பிரம்மாண்டத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்த சிறுத்தை சிவா, படத்தின் திரைக்கதையை அமைப்பதில் கோட்டை விட்டார்.
அதுமட்டுமல்லாமல் இதன் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கங்குவா அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என சூர்யா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் சிறுத்தை சிவா உள்ளிட்டோர் பேசினார்கள். ஆனால் அவர்கள் சொன்னது போல படம் இல்லை. இதனால் வெறும் இரண்டே வாரங்களில் கங்குவா காணாமல் போனது.
பான் இந்தியா அளவில் வெளியான இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் கூட வசூல் செய்யவில்லை. இப்படியான சூழலில் சூர்யாவும் அடுத்த வெற்றியை எப்படியாவது பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது ஆர் ஜே பாலாஜி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அவரின் 45 வது திரைப்படமாக உருவாகி வருகிறது. கதாநாயகியாக த்ரிஷா நடித்து வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க கங்குவா படத்தின் தோல்வியால் கதி கலங்கி போயிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். சூர்யாவின் 44வது திரைப்படத்தை அவர்தான் இயக்கியும் தயாரித்தும் உள்ளார். இப்படியான சூழலில் கங்குவா தோல்வி அடைந்து இருப்பதால் அவரின், திரைப்படம் பெரிய அளவில் மார்க்கெட்டிற்கு செல்லாது. குறைந்த தொகைக்கு தான் அந்த திரைப்படத்தை விற்பனை செய்ய வேண்டி இருக்கும் என்ற வருத்தம் கார்த்திக் சுப்பராஜை சுற்ற வைத்து வருகிறதாம். இதனால் படத்தின் போஸ்ட் ப்ரடக்சன் பணிகளையும் தற்போது தள்ளி வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





