கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பஸ் கண்டக்டராக இருந்தவர் சிவாஜி ராவ். அவரிடம் இருந்த நடிப்பாற்றலை பார்த்து வியந்த அவரது நண்பர் ராஜ் பகதூர், சினிமாவில் நடிக்க அறிவுறுத்தி சென்னைக்கு அவரை அனுப்பி வைத்தார். இயக்குனர் கே பாலசந்தர், தனது இயக்கத்தில் உருவான அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்த் என பெயரை மாற்றி சிறிய கேரக்டரில் நடிக்கவும் வைத்தார். அந்த படம் 1975ம் ஆண்டில் வெளியாகி ரஜினியின் நடிப்பு கவனம் பெற்றது.
அபூர்வ ராகங்கள்தான் ரஜினிகாந்த் நடித்த முதல் படம். அதன்பிறகு படிப்படியாக கே பாலசந்தர் இயக்கிய பல படங்களில் கமலுடன் இணைந்து ரஜினி நடித்தார். பிறகு தனியாக சில படங்களில் நடித்தார். எஸ்பி முத்துராமன் போன்ற பிற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து முன்னணி நடிகராக மாறினார்.
தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உயர்ந்தார். ரஜினி கமல் என இரண்டு நட்சத்திர கலைஞர்கள் தமிழ் சினிமாவை ஆட்சி செய்தனர். ரஜினி 74 வயதிலும் கமல் 70 வயதிலும் இன்றும் அவர்கள் உச்ச நட்சத்திர நடிகர்களாக திரை பயணத்தை வெற்றிக்கரமாக தொடர்கின்றனர். இதில் கமல் அரசியல் களத்தில் ராஜ்யசபா எம்பியாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினிகாந்த் இப்போது 2025ம் ஆண்டில் தனது 50 ஆண்டு கால சினிமா பயணத்தை நிறைவு செய்திருக்கிறார். பொன்விழா ஆண்டில் அவர் இருக்கிறார். ரஜினியுடன் நடிக்க வந்த பல நடிகர்கள் காணாமல் போய்விட்டனர். ஒரு கட்டத்தில் அப்பா தாத்தா கேரக்டர்களுக்கு மாறிவிட்டனர். ஆனால் ரஜினிகாந்த் இப்போதும் ஜெயிலர் 2 படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான அவரது கூலி படம் ரூ. 400 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை செய்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் ஒரு சரித்திர நாயகனாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கோலிவுட் தரப்பில் இன்னும் பாராட்டு விழா நடத்தாமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர். தென்னிந்திய நடிகர்கள் சங்கம் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் இயக்குனர்கள் சங்கம் பெப்சி அமைப்பு என அனைத்து தமிழ் சினிமா அமைப்புகளும் இணைந்து நடிகர் ரஜினிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
எப்படியாவது பெரிய ஹீரோவாக வரவேண்டும் என்று பலர் தமிழ் சினிமாவில் நடிக்க வந்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் நடித்த சில படங்களிலேயே அவர்களை ரசிகர்கள் புறக்கணித்து வெளியேற்றி இருக்கின்றனர். ஆனால் 50 ஆண்டுகளில் 171 படங்களில் நடித்த ரஜினிகாந்த், ஒரு சரித்திர சாதனையை தமிழ் சினிமாவில் படைத்திருக்கிறார். அதற்கான அங்கீகாரம் தரவேண்டியது கௌரவபடுத்த வேண்டியது கோலிவுட்டின் தலையாய கடமை. இனியும் தாமதிக்கலாமா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.





