நடிகர் ரஜினிகாந்த் இதுவரை 169 படங்களில் நடித்து அந்த படங்கள் திரைக்கு வந்திருக்கின்றன. அவரது 169வது படம், நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர். கடந்த ஆண்டு வெளியான இந்த படம் வெற்றி நடை போட்டது. ரஜினிக்கு மீண்டும் ஒரு பாட்ஷா போன்ற கம்பேக்கை ஜெயிலர் படம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது தசெ ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துவிட்டார். அந்த படத்தின் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் நடந்துவரும் நிலையில், வருகிற அக்டோபர் 10ம் தேதி இந்த படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதில் அமிதாப் பச்சன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், கூலி படத்தில் நடித்து வருகிறார். சென்னை, ஐதராபாத், விசாக பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், கன்னட நடிகர் உபேந்திரா, கன்னட நடிகை ரக்சிதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். வருகிற தமிழ் புத்தாண்டு, 2025ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி இந்த படம் ரிலீஸாக வாய்ப்புள்ளது.
கூலி படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார். இதுவரை ரஜினிகாந்த், அவர் நடித்த எந்த படத்தின் 2ம் பாகத்திலும் அவர் நடித்தது இல்லை. அப்படி 2ம் பாகம் எடுக்கப்பட்ட சந்திரமுகி 2ல் கூட ராகவா லாரன்ஸ்தான் ரஜினி கேரக்டரில் நடித்திருந்தார்.
ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் ஒரு படத்திலும், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்திலும், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் ஒரு படத்திலும் ரஜினிகாந்த் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். அந்த 3 படங்களின் இயக்குனர்கள் குறித்த விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என தெரிகிறது.
இதுகுறித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன், தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் ரஜினியை கலாய்த்து ஒரு பதிவை செய்துள்ளார். அதில், சிஸ்டம் சரியில்லே, தமிழ்நாட்டை மாத்தஅரசியலுக்கு வரப் போறதா சொன்னாரு. கடைசியில் ஓய்வு தேவைப்படுது, டாக்டர்கள் சொன்னாங்கன்னு அரசியல் கட்சியை கேன்சல் பண்ணினாரு. ஆனா இப்போ ஓய்வே இல்லாம ஆக்சன் படங்களாக நடிச்சு தள்ளிக்கிட்டு இருக்காரு, என ரஜினியை பங்கம் செய்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.





