நடிகர் ரஜினிகாந்த் தனது 170வது படம் வேட்டையன் படத்தை நடித்து முடித்து விட்டார். இந்த படத்தை தசெ ஞானவேல் இயக்கி உள்ளார். லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. தீபாவளிக்கு முன்னதாக, இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படமான கூலி படத்தில் நடிக்கிறார். வரும் ஜூன் மாதம் பட பூஜையுடன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
இதற்கிடையே கடந்த பத்து தினங்களுக்கு முன், நடிகர் ரஜினிகாந்த் அபுதாபி சென்றிருந்தார். அங்குள்ள அரபு நாடுகள் ஐக்கிய அமீரகம், ரஜினிகாந்துக்கு கோல்டு விசா கொடுத்து கௌரவித்தது. இந்த கோல்டு விசாவை பயன்படுத்தி 10 ஆண்டுகளுக்கு ரஜினி எப்போது வேண்டுமானாலும் அரபு நாடுகளுக்கு சென்று வரலாம்.
இந்நிலையில் நேற்று அதிகாலையில், சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் ஒரு நாள் மட்டுமே வீட்டில் ஓய்வெடுத்த நிலையில், இப்போது மீண்டும் இமயமலைக்கு கிளம்பி விட்டார். அங்கு ஒரு வாரம் தனது நண்பர்களுடன் தங்கும் ரஜினிகாந்த் அங்குள்ள முக்கிய ஆன்மிக தலங்களுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளார்.
குறிப்பாக, இமயமலைக்கு செல்லும் ரஜினிகாந்த் பத்ரிநாத், கேதர்நாத், பாபாஜி குகை ஆகிய பகுதிகளுக்கு சென்று தியானத்தில் ஈடுபடுவார். அங்கு தனது நணபர்களுடன் நடைபயணம் செய்து, ஆன்மிக தலங்களில் உள்ள குருமார்களை சந்தித்து ஆசி பெறுவதும் வழக்கம். இந்த முறை ஒரு வாரம் இமயமலையில் இருக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார்.
இன்று காலை இமயமலைக்கு புறப்படும் முன்பாக, தனது போயஸ்கார்டன் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் இமயமலைக்கு ஆன்மிக பயணம் செல்வேன். அங்கு கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இருக்கிறேன். இமயமலையில் ஒருவாரம் தங்கி இருப்பேன் என்று கூறினார்.
அப்போது, செய்தியாளர்கள், மக்களை தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கிறீர்களா, என்று கேள்வி எழுப்பினர். மன்னிக்கவும், அரசியல் கேள்விகள் வேண்டாமே என, உடனடியாக பதில் அளித்து செய்தியாளர்களுக்கு ஏமாற்றம் தந்தார். தமிழ் சினிமாவில் இசையா, பாடலா என்ற பிரச்னை போய்க்கொண்டு இருக்கிறதே என்ற கேள்விக்கு, கைகூப்பிய ரஜினி, அண்ணா நோ கமெண்ட்ஸ் என்று கூறினார்.





