சீனு ராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி குறுகிய காலத்திற்குள் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். இதில் பல்வேறு திரைப்படங்கள் அவர் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு உறுதுணையாக இருந்தன.
ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில், வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தார் விஜய் சேதுபதி. பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக அவர் நடித்திருந்தார். ஆனால் அவரது கதாபாத்திரத்திற்கு இயக்குனர் கொஞ்சம் கூட வலு சேர்க்கவில்லை என்று பலரும் கூறினர்.
இந்த சமயத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் அவர் விஜய்க்கு எதிராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை தனக்கான ரோலை சரியாக பயன்படுத்திக் கொண்டார் விஜய் சேதுபதி. சொல்லப்போனால் விஜய் யை விட பல சீன்களில் அவர் ஸ்கோர் பண்ணினார். பவானியாக மிரட்டிய விஜய் சேதுபதிக்கு மாஸ்டர் திரைப்படம் ஒரு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது.
தொடர்ந்து பாலிவுட் திரையுலகிலும் அவர் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் இது எந்த வகையிலும் விஜய் சேதுபதிக்கு பெரிய தாக்கத்தை கொடுக்கவில்லை. இதனால், இனி வில்லனாக நடிப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டார் விஜய் சேதுபதி. தொடர்ந்து ஹீரோவாக நடிப்பதிலேயே தனது கவனத்தை செலுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இப்படியான சூழலில் தான் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக, மகாராஜா திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் முடி திருத்தும் தொழிலாளியாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். குரங்கு பொம்மை திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த மிதிலன் சாமிநாதன் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
வரும் 14ஆம் தேதி மகாராஜா திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தனது ஐம்பதாவது படம் குறித்து பேசி இருக்கும் விஜய் சேதுபதி, இந்த படத்தில் நடித்தது பெருமையாக உள்ளது. ஒவ்வொரு திரைப்படத்திலிருந்தும் நான் ஏதோ ஒன்றை கற்றுக் கொள்கிறேன். அது என்னை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்கிறது. எனக்கும் இயக்குனராகும் ஆசை கண்டிப்பாக இருக்கிறது. அதோடு சேர்த்து பயமும் உள்ளது. நான்கு பிரேமுக்குள் கதை சொல்லத் தெரியும் போது நிச்சயமாக அதை செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.





