கங்குவா படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்த 44வது படம் ரெட்ரோ. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் டைரக்ட் செய்திருந்தார். சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இந்த படம் கடந்த மே 1ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. மொத்தமாக ரூ. 235 கோடி வரை வசூலித்து வெற்றிப் படமாக அறிவிக்கப்பட்டது.
ரெட்ரோ படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்த 45வது படத்தை நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி டைரக்ட் செய்தார். கடந்த அக்டோபரில் இந்த படத்தின் ஷூட்டிங், கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் பூஜையுடன் துவங்கியது. இது கருப்பசாமியின் கதை என்றும் ஆரம்பத்திலேயே தகவல் வெளியானது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் கோவில் போன்ற பிரமாண்ட செட் அமைத்து 2 மாதங்கள் அங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து சென்னையில் சில பகுதிகளில் படப்பிடிப்பு நடந்த நிலையில் 90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. வருகிற தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சூர்யா நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் திரிஷா சுவாசிகா ஷிவதா நட்டி நடராஜ் யோகிபாபு மன்சூர் அலிகான் ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு சாய் அபயங்கள் என்ற இளம் இசையமைப்பாளர் இசைமைத்துள்ளார்.
அய்யனார் கருப்பசாமியின் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருப்பதாகவும் கடவுள் அவதாரம் எடுத்த சூர்யா, வக்கீல் கேரக்டரில் இந்த படத்தில் வருவதாகவும் கூறப்படுகிறது. சிங்கம் படம் போல சூர்யாவுக்கு இந்த படம் பேர் சொல்லும் ஒரு முக்கிய படமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே இந்த படத்தின் டைட்டில் இன்று வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இந்த படத்துக்கு வேட்டை கருப்பு என பெயர் வைக்கப்பட்டதாக தகவல் பரவிய நிலையில், இன்று சூர்யா 45 படத்தின் டைட்டிலை படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி இந்த படத்துக்கு கருப்பு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கருப்பு என்பது கிராமத்து காவல் தெய்வமான கருப்பசாமியை குறிக்கும் பெயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





