நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் படம், வரும் பிப்ரவரி 9ம் தேதிக்கு திரைக்கு வருகிறது. ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா டைரக்ட் செய்திருக்கும் இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், தன்யா பாலகிருஷ்ணன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் ரஜினி பல விஷயங்களை மனம் திறந்து பேசினார். லால் சலாம் படத்தில் நடித்த தனது அனுபவங்களை குறிப்பிட்டார். மேலும் விஜய், நான் பார்த்து வளர்ந்த பையன். அவரை நானோ, அல்லது என்னை அவரோ போட்டியாக நினைத்தால் அது கவுரவமில்லை. அது கண்டிப்பாக மரியாதையாக இருக்காது எனவும் குறிப்பிட்டார்.
ஜெயிலர் படம் குறித்து பேசிய ரஜினி, எனது நெருங்கிய நண்பன் ஒருவன். அவனும் பெரிய நடிகன்தான். நான் நடித்த ஜெயிலர் படம் ரிலீசான போது, அந்த படத்தை பார்க்க எனக்கு தனியாக ஏற்பாடு செய்து கொடு என்றான். நான் போனால், கூட்டத்தில் ஆடியன்ஸ் தொந்தரவு இருக்கும், என்றான்.
அவன் சொன்னபடி ஜெயிலர் படம் பார்க்க ஏற்பாடு செய்து கொடுத்தேன். அவனும் படம் பார்த்துவிட்டான். பிறகு என்னிடம் போன் செய்து பேசினான். அப்போது ஜெயிலர் படம் பார்த்தாயே, படம் எப்படி இருந்தது என்று கேட்டேன். உண்மையை சொல்லட்டுமா, பொய் சொல்லட்டுமா என்று என்னிடம் கேட்டான். உண்மையை சொல்லுடா என்றேன்.
ஜெயிலர் படம் 30 பர்சன்ட் நல்லா இருக்குது. மீதி 70 பர்சன்ட் வயிறு எரியுதுடா என்றான். ஏண்டா என்றேன். உனக்கு மட்டும் எப்படீடா இந்த மாதிரி டைரக்டர்ஸ் கிடைக்கறாங்க? நெல்சன் கிட்ட சொல்லி என்னையை வெச்சு ஒரு படம் பண்ண சொல்லு, எவ்ளோ சம்பளம்னாலும் கொடுத்துடறேன் என்றான்.
அப்படி எல்லாம் நெல்சன் படம் பண்ண மாட்டாருன்னு சொல்லிட்டேன். ஏன்னா, கடந்த 10 வருஷமா அவன் நடிச்ச படம் எதுவுமே சரியா போகலை என்று கூறினார். ரஜினி அப்படி குறிப்பிட்டுச் சொன்ன நண்பர், தெலுங்கு நடிகர்களான சிரஞ்சீவி அல்லது மோகன்பாபு இந்த இருவரில் யாராவது ஒருவராக தான் இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஏனெனில் அந்த இருவரின் படங்கள்தான், பல ஆண்டுகளாக சரியாக ஓடுவதில்லை. இதில் ரஜினியை இப்படி டா என்று அழைத்து பேசுவது, நடிகர் மோகன்பாபு என்பதும் குறிப்பிடத்தக்கது.





