நடிகர் ரஜினிகாந்துக்கு சினிமாவில் சில நெருக்கமான நண்பர்கள் உள்ளனர். அதில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் கவிஞர் வைரமுத்து. ரஜினி நடித்த பல படங்களில் ஏராளமான பாடல்களை எழுதியவர் கவிஞர் வைரமுத்து. எப்போதுமே ரஜினிக்கும் வைரமுத்துவுக்கும் நெருக்கமான நட்பு இருந்து வருகிறது. இருவரது சந்திப்பும் அவ்வப்போது நடந்து வருகிறது.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது வலைதள பக்கத்தில் செய்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று எனது இல்லத்திற்கு வருகை தந்தார். ‘பாசமுள்ள மனிதனப்பா – நான் மீசவச்ச குழந்தையப்பா’ என்ற வரிகளுக்கு இப்போதும் அவர்தான் இலக்கியமாக இலங்குகிறார்.
வியப்புக்குரிய மனிதர்தான். அடித்துக்கொண்டோடும் அரசியல் வெள்ளம், சாய்த்து விட்டோடும் சமூகப் புயல் இரண்டையும் அரை நூற்றாண்டாய்க் கடந்து தன்னிடத்தை ஒருவர் தக்க வைத்துக் கொள்வது ஜாதகத்தால் ஆவதல்ல; சாமர்த்தியத்தால் ஆவது.
உணவு முறை, உடல் நிலை குறித்து ஊடாடிய எங்கள் உரையாடல் ஊர் சுற்றக் கிளம்பியது. எங்கள் நூறு நிமிட உரையாடலை கிரீன் டீ கூடக் கெடுக்கவில்லை. தமிழ்நாட்டின் நிகழ்கால வெப்ப அரசியல் குறித்து விவாதித்தோம். ஒவ்வொரு தரவிலும் அவருக்குள்ள ஆழமும் தெளிவும் உண்மையும் என் ஆர்வத்தைத் தூண்டின.
வடநாட்டு அரசியல் குறித்தும் அங்கு நேரப்போவதாக நம்பப்படும் ஒரு திருப்பம் குறித்தும் அவர் சொன்னபொழுது நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான அவரது கலைப்பயணத்தின் திட்டங்களை விவரித்தார். 2027 ரஜினி ரசிகர்களுக்குக் கொண்டாட்ட ஆண்டாக இருக்கும்; குறித்துக் கொள்ளுங்கள்.
அவரிடம் முதிர்ச்சி தெரிகிறது, முதுமை தெரியவில்லை. ‘இளமை இனிமேல் போகாது முதுமை எனக்கு வாராது’ என் தமிழ் பொய்யாகவில்லை என்று அந்த கவிதை வடிவ பதிவின் வழியாக இன்றைய அரசியல் நிலவரம் குறித்து ரஜினி தன்னிடம் பேசிய ரகசியத்தை சொல்லிவிட்டார் கவிஞர் வைரமுத்து. நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக தலைவர் 173 என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ரஜினியின் நெருங்கிய நண்பர் கமல்ஹாசன் தான் தயாரிக்க உள்ளார்.





