- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த படத்தில் நான்தான் ஹீரோ, தனது நண்பர்களிடம் பொய் சொல்லி ஏமாற்றிய நடிகர் ரஜினிகாந்த் -...

இந்த படத்தில் நான்தான் ஹீரோ, தனது நண்பர்களிடம் பொய் சொல்லி ஏமாற்றிய நடிகர் ரஜினிகாந்த் – அதற்கு பின்னால் இருந்த உண்மை இதுதான்!

- Advertisement -

இயக்குனர் கே பாலசந்தர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அறிமுகமான முதல் படம் அபூர்வ ராகங்கள். கடந்த 1975ம் ஆண்டில் இந்த படம் வெளியானது. இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகர் ரஜினிகாந்த் ஒரு நேர்காணலில் கூறியதாவது, அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் தான் நான் நடித்தேன். அதைச் சொன்னால் இதற்காகவா 2 வருஷமா சென்னையில் சினிமா பற்றி படித்தாய் என்று என் நண்பர்கள் கிண்டல் செய்வார்களே? என்று நினைத்தேன்.

அதனால் அபூர்வ ராகங்கள் படத்தில் நான்தான் ஹீரோ என்று அவர்களிடம் சும்மா கதை விட்டேன். எப்படியும் ஒரு வருடம் ஒன்றரை வருடம் கழித்து தான் இந்த படம் பெங்களூருக்கு தியேட்டரில் வரும் என்று நினைத்து தைரியமாக அப்படி சொன்னேன். ஆனால் என்னுடைய நேரம், அந்த படம் 2 மாதத்திலேயே பெங்களூரில் தியேட்டர்களுக்கு வந்து விட்டது.

- Advertisement -

அப்போது நானும் பெங்களூரில் தான் இருந்தேன். என் நண்பர்களுக்கு ஒரே சந்தோஷம். ஆனால் எனக்கோ தர்ம சங்கடமாக இருந்தது. அவர்களிடம் என்ன சொல்வது என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லை. அபூர்வ ராகங்கள் படம் ரிலீசான அன்று முதல் காட்சிக்கு என்னுடைய நண்பர்கள் எல்லோரும் தியேட்டருக்கு போய் விட்டார்கள்.

இந்த படத்தின் ஹீரோ எங்கள் நண்பன்தான் என்று கூறி அங்கிருந்த எல்லோருக்கும் இனிப்பு கொடுத்தார்கள். ஆனால் படம் ஆரம்பித்து டைட்டிலில் சிவாஜிராவ் என்கிற என் பெயரை அவர்கள் தேடுகிறார்கள். ஆனால் அந்தப் பெயர் திரையில் வரவில்லை. ஏனென்றால் என்னுடைய பெயரை தான் ரஜினிகாந்த் என்று மாற்றிவிட்டார்களே? திரையில் வந்த ரஜினிகாந்த் என்ற பெயர் நான்தான் என்று அவர்களுக்கு தெரியவில்லை.

- Advertisement -

படம் தொடர்ந்து ஓடியது. படத்தில் நான் இல்லை. இடைவேளையும் வந்துவிட்டது. நான் தியேட்டருக்குள் அவர்கள் கண்ணில் படாமல் மெல்ல வெளியே போய் விட்டேன். படத்தில் நான் இல்லை என்ற முடிவுக்கு என் நண்பர்கள் வந்து விட்டார்கள். இருந்தாலும் படம் நன்றாக இருக்கிறது பார்த்துவிட்டு போகலாம் என்று தியேட்டருக்குள் உட்கார்ந்திருந்தார்கள்.

இடைவேளை முடிந்து படம் மீண்டும் தொடங்கியது. இரண்டு கதவுகளையும் தள்ளிவிட்டு ஒருவன் உள்ளே நுழைகிறான். தாடி மீசை பழைய கோட்டில் என்னை பார்த்த நண்பர்கள், எங்கேயோ இந்த முகத்தை பார்த்த மாதிரி இருக்கு என்று ஆச்சரியமாக நிமிர்ந்து உட்காருகிறார்கள் கொஞ்ச நேரம் போனதும் அது நான் தான் என்பது அவர்களுக்கு தெரிகிறது. உடனே நண்பர்களுக்கு உற்சாகம் தாங்கவில்லை என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். ஆனால் அந்த படத்தில் ஹீரோ கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்