கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நடிகர்கள் இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் சம்பளம் பல மடங்கு தாறுமாறாக எகிறிவிட்டது. இதனால் படத்தின் பட்ஜெட்டில் படத்தின் தயாரிப்பு செலவை விட இவர்களது சம்பளமே பெரும் பகுதி போய் விடுகிறது. ஆனால் படம் நஷ்டம் அடைந்தால் தயாரிப்பாளர்கள் தான் பலத்த பாதிப்பை சந்திக்கின்றனர்.
அதனால் நடிகர்களும் ரெவின்யூ ஷேர் அதாவது வருமானத்தில் பங்கு என்ற முறையில் படங்களில் நடிக்க முன்வர வேண்டும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை வலியுறுத்தி நேற்று 2ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமும் நடந்தது. ஆனால் நடிகர்கள் தரப்பில் இருந்து இதற்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் அதிக சம்பளத்தில் மட்டுமே குறியாக இருக்கின்றனர்.
இதுகுறித்து நடப்பு தயாரிப்பாளர் சங்க பொருளாளர் தயாரிப்பாளர் ஜி தனஞ்ஜெயன் கூறியதாவது, இந்த வேலை நிறுத்தத்தின் நோக்கமே இப்போது இருக்கிற ஒரு நிச்சயமற்ற சூழலில் என்ன வியாபாரம் நடக்கும் என்பதே சினிமா துறையில் தெரியாமல் உள்ளது. அதனால் சினிமா வியாபாரத்தில் நடிகர்களும் பங்கு கொள்ள வேண்டும். ஒரு நிலையான சம்பளத்தை நடிகர்கள் தயாரிப்பாளர்களிடமிருந்து பெறும் போது அவர்கள் மட்டும் தங்களை காப்பாற்றிக் கொள்கிறார்கள்.
நடிகர்கள் நடிகைகள் முன்னணி இயக்குனர்கள் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான சம்பளம் வாங்குபவர்கள் இதில் உள்ளனர். அவர்களுக்கான ஒரு வருவாய் நிச்சயமாக கிடைத்து விடுகிறது. ஆனால் படத்தின் வியாபாரத்திற்கு ஒரு நிச்சயமற்ற நிலை தான் நிலவி வருகிறது. வியாபாரத்தில் அவர்களும் பங்கு பெற வேண்டும். வரும் வருவாயை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இதை வலியுறுத்தி தான் தயாரிப்பாளர்கள் தரப்பில் நேற்று வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. நாங்கள் ஏன் இதில் பங்கு கொள்ள வேண்டும் என நடிகர்களும் நடிகைகளும் கேட்பது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து நஷ்டம் அடைந்து கொண்டே இருக்கின்றனர். சமீபத்தில் வெளிவந்த சில பெரிய படங்களின் தயாரிப்பாளர்கள் கடுமையான நஷ்டமடைந்தனர். இதை தவிர்த்தே ஆக வேண்டும் என்று தனஞ்செயன் கூறியிருக்கிறார்.
கடந்த 15 ஆண்டுகளாக பாலிவுட்டில் முன்னணி ஹீரோக்கள் அமீர்கான் சல்மான்கான் ஷாருக்கான் அக்சய் குமார் அஜய் தேவ்கன் போன்ற நடிகர்களும் மற்றும் தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி வெங்கடேஷ் நாகர்ஜூனா போன்ற முன்னணி நடிகர்கள் பலரும் இப்படி வருமானத்தில் பங்கு என்ற முறையில் தான் சம்பளம் வாங்கி படங்களில் நடித்து வருகிறார்கள் என்றும் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





