நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் தனது 50வது பொன்விழா ஆண்டை இப்போது கொண்டாடி வருகிறார். கடந்த 1975ம் ஆண்டில் அபூர்வ ராகங்கள் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், இப்போது 2025ம் ஆண்டில் தனது 172வது படம் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்போதும் 74 வயதில் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என கடந்த 1994ம் ஆண்டு முதல் தமிழக மக்கள் மத்தியிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ஆண்டவன் சொன்னால் உடனே வந்து விடுவேன் என்று கூறிய ரஜினிகாந்த் கடைசியில் தமிழகத்தில் புரட்சி வெடித்தால் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறிவிட்டார்.
ஆனால் ஆரம்பத்தில் ரஜினிகாந்த் ரசிகராக சில படங்களில் நடித்த நடிகர் விஜய் இப்போது தமிழகத்தில் முக்கிய அரசியல்வாதியாக களத்தில் நிற்கிறார். வருகிற 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தலில் முதல்வர் பதவி எனக்குதான் என்றும் தீர்மானமாக கூறி வருகிறார். அதற்கேற்ப மக்கள் மத்தியிலும் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இதற்கிடையில் சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒன்று ஒளிபரப்பானது. அந்த வீடியோவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது, மொபைல் போன் யுகத்தில் நமது இளைஞர்கள், சில பெரியவர்கள் பாரத நாட்டின் சம்பிரதாயம் கலாச்சாரம் அருமை பெருமை தெரியாமல் உள்ளனர்.
தங்களது கலாச்சாரம் பாரம்பரியத்தில் நிம்மதி சந்தோஷம் கிடைக்கவில்லை என்று கூறி மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவை நோக்கி வருகின்றனர். இங்கு தான் நிம்மதி சந்தோஷம் கிடைக்கிறது என்கின்றனர். தியானம் யோகா இயற்கையான வாழ்க்கை அதை நோக்கி அவர்கள் வருகின்றனர்.
நமது கலாச்சாரம் அருமை பெருமைகளை இளைஞர்களிடம் சேர்க்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் ஆதங்கமாக பேசியிருக்கிறார் இப்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திடீரென இப்படி ஒரு வீடியோவை ரஜினிகாந்த் பேசி வெளியிட்டது ஏன் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





