திரைப்படங்களில் பல்வேறு கேரக்டர்களில் நடிகர்கள் நடிக்கின்றனர். ஆனால் எந்த ஒரு படத்திலாவது கடவுள் வேடத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை நடிகர்களுக்கு உள்ளூர மனதில் இருக்கும். எத்தனை விதமான வித்தியாசமான வேடங்களில் நடித்தாலும் கடவுள் வேடம் என்பது அவர்களுக்கு ரசிகர்களிடம் தனி மரியாதை பெற்று தரும்.
மேலும் மனதிற்கும் ஒரு விதமான ஆத்ம திருப்தியை அளிக்கும். தனிப்பிறவி என்ற படத்தில் முருகன் கெட்டப்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்திருக்கிறார். திருவிளையாடல் உள்ளிட்ட பல படங்களில் சிவன் உள்பட பல கடவுள் வேடங்களில் சிவாஜி கணேசன் நடித்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் முருக பெருமான் என்றாலே நடிகர் சிவக்குமார் தான் ஞாபகத்துக்கு வருவார்.
பல தமிழ் படங்களில் அவர் கந்த பெருமானாக நடித்திருக்கிறார். இப்போது நடித்து வரும் பல நடிகர்களுக்கு கடவுள் வேடம் என்பது எட்டாக்கனியாக இருக்கிறது. நடிகர் சூர்யா சில பாடல்களில் முருகனாக காட்சி தந்துள்ளார். இப்போது நடிகர் ரவி மோகன் கடவுளாக நடிக்கிறார். அவர் வட்டி காசலவாடா என்ற தெலுங்கு படத்தில் திருப்பதி பெருமாளாக நடிக்கிறார்.
திருப்பதி வெங்கடேச பெருமாளை குறிக்கும் சொல் வட்டிகாசுவாடு என்பதாகும். காசுகளுக்கு உரியவன் அல்லது காசுகளை உடையவன் என்று இதற்கு அர்த்தம். பக்தர்கள் திருப்பதி பெருமாளுக்கு நேர்த்திக்கடனாக காணிக்கை செலுத்துவதாலும் பத்மினி தாயாரை மணப்பதற்காக குபேரனிடம் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துபவர் என்கிற ஐதீகத்தாலும் அவரை அன்போடு வட்டி காசலவாடா என்று தெலுங்கில் அழைப்பார்கள்.
அதுதான் இந்த படத்துக்கும் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் மோகன் பாபு மகன் மனோஜ் மஞ்சு ஹீரோவாக நடிக்கிறார். இயக்குனர் தேஜ் உப்பலபதி படத்தை டைரக்ட் செய்கிறார். படத்தின் தலைப்பு இப்படி இருந்தாலும் இது ஆன்மீக படம் அல்ல. இன்றைய பிரபல இஎம்ஐ தவணை முறை கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு நடுத்தர வர்க்க மக்களின் நிதி போராட்டங்களை நகைச்சுவையாகவும் பொழுது போக்காகவும் சொல்லும் கதைக்கருவை கொண்டுள்ளது.
ஹீரோ மனோஜ் மஞ்சு இறைவனிடம் மன்றாடுவது, வாங்கிய கடனுக்கு பணம் செலுத்த முடியாமல் வட்டி கட்ட முடியாமல் தவிப்பது என்று படத்தின் கதை இருக்கிறது. அந்த படத்தில் ஒரு பகுதியாக பெருமாளாக நடிகர் ரவிமோகன் நடிக்கிறார். தெலுங்கில் நடிகர் ரவி மோகன் நேரடியாக அறிமுகமாகி நடிக்கும் முதல் படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.





