தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக ஒரு காலகட்டத்தில் இருந்தவர் நடிகை நமீதா. கடந்த 1990களில் பல படங்களில் அவர் நாயகியாக நடித்திருந்தார். நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படம் மூலம் அவர் நாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து ஏய் பம்பரக் கண்ணாலே இங்கிலீஸ்காரன் கோயம்புத்தூர் பிரதர்ஸ் பச்சக்குதிர பில்லா அழகிய தமிழ் மகன் நான் அவன் இல்லை உள்ளிட்ட பல படங்களில் நமீதா நடித்திருந்தார். பெரும்பாலான படங்களில் அவர் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
திருமணத்துக்கு பிறகு சில ஆண்டுகள் சினிமாவுக்கு விட்டு விலகி ஓய்வு எடுத்த நமீதா அரசியல் களத்தில் காணப்பட்டார். தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் அவர் ரீ என்ட்ரி தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய நடிகை நமீதா திருமணம் குறித்து கூறிய சில கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அந்த நேர்காணலில் நடிகை நமீதா கூறியதாவது, திருமணத்திற்கு பிறகு பெண் மட்டும் ஏன் தாலி அணிய வேண்டும்? பெண்கள் மட்டுமே சில மரபுகளை பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் ஏன் பெண்களுக்கு மட்டும் உருவாக்கப்பட்டுள்ளன? ஆண்களுக்கு இது போன்ற கட்டுப்பாடுகள் இல்லையே.
ஒரு மனைவியாக நான் என் கணவருக்காக விரதம் இருந்து அவர் நீண்ட காலம் வாழப் பிரார்த்திக்க முடியும். ஆனால் கணவர் ஆண்டுக்கு ஒரு நாளாவது தன் மனைவி நலனுக்காக ஒதுக்க வேண்டும் என்று விதி இருக்கிறதா? அப்படி ஒரு விதியே இல்லை. சமூகம் ஏன் அப்படி ஒன்றை உருவாக்கவில்லை? ஏன் எல்லா விதிகளும் பெண்களுக்கு மட்டுமே எழுதப்படுகின்றன.
திருமணத்திற்கு பிறகு பெண்கள் தாலி அணிய வேண்டும் என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளதா? புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதா? நிச்சயமாக இல்லை என்று நடிகை நமீதா அந்த நேர்காணலில் ஆவேசமாக கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆண்கள் மீது நமீதாவுக்கு ஏன் இந்த கோபம்? வழக்கமாக மச்சான்ஸ் மச்சான்ஸ் என்று கொஞ்சி பேசுவாரே? என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





