நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா சாப்டர் 1 படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பல மொழிகளில் இந்த படம் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் வெளியான இந்த படத்தில் கதாநாயகன் ரிஷப் ஷெட்டிக்கு நடிகர் மணிகண்டன் பின்னணி குரல் பேசியிருக்கிறார்.
கடந்த 2022ம் ஆண்டில் வெளியான படம் காந்தாரா. கன்னட மொழியில் நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றதால் பிறகு தமிழ் தெலுங்கு என பிறமொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. சகலதரப்பு ரசிகர்களிடம் பெரிய ஆதரவை பெற்ற ரூ. 15 கோடி பட்ஜெட்டில் உருவான காந்தாரா படம் ரூ. 400 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது.
இதைத் தொடர்ந்து இப்போது காந்தாரா சாப்டர் 1 என்ற படம் நேற்று வெளியாகி உள்ளது. ரிஷப் ஷெட்டி மீண்டும் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்துக்கு முதல் நாளில் நல்ல ஒப்பனிங் கிடைத்துள்ளது. படம் பார்த்தவர்கள் வேற லெவல் படம். குறிப்பாக மேக்கிங்கில் இந்திய திரைப்படங்களில் ஒரு மைல்கல்லாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.
வழக்கமாக ஹீரோயிசத்தை நம்பி படம் எடுக்கும் தமிழ் தெலுங்கு இந்தி படங்களுக்கு மத்தியில் வித்யாசமான கதைக்களத்தில் தெய்வ நம்பிக்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் பல விருதுகளை வெல்லும் என்பது மட்டுமின்றி 1000 கோடி ரூபாய் வசூல் எல்லாம் மிக சாதாரணமாகவே நடந்துவிடும் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக மணிகண்டன் காந்தாரா சாப்டர் 1 படத்தில் படத்தின் ஹீரோ ரிஷப் ஷெட்டிக்கு பின்னணி குரல் பேசியிருக்கிறார். நடிக்க வருவதற்கு முன்பு நடிகர் மணிகண்டன் துணை இயக்குனர் டப்பிங் கலைஞர் ஸ்கிரிப்ட் ரைட்டர் மற்றும் மிமிக்ரி கலைஞராக இருந்தவர் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த சூழலில் ரிஷப் ஷெட்டி நடிகர் மணிகண்டனை தனக்கு டப்பிங் பேச வைத்தது ஏன் என்பது குறித்து சமீபத்தில் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ரிஷப் ஷெட்டி கூறியதாவது, அஜீத்குமார் போல மிமிக்கிரி செய்து நடிகர் மணிகண்டன் பேசிய வீடியோ ஒன்றை பார்த்தேன். அஜீத் சார் இளமையாக இருக்கும் போது, அதன் பின் அவர் குரல் மாறிய போதும் என 2 விதமான குரல்களிலும் மணிகண்டன் அசத்தலாக பேசிக்காட்டினார். அப்போதே அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஒரு டப்பிங் கலைஞர் குரல் மட்டும்தான் கொடுப்பார். ஆனால் ஒரு நடிகரால்தான் ஒரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க முடியும். அந்த வகையில் காந்தாரா சாப்டர் 1 தமிழில் என் கேரக்டருக்கு மணிகண்டன் பின்னணி குரல் பேசி உயிர் கொடுத்து இருக்கிறார் என்று நடிகர் ரிஷப் ஷெட்டி பாராட்டியிருக்கிறார்.





