இயக்குனர் சிகரம் கே பாலசந்தர், இயக்குனர் அமீர் போன்றவர்களிடம் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்தவர் சமுத்திரக்கனி. பிறகு இயக்குனர் சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படம் மூலம் வில்லனாக அறிமுகமானார். அடுத்து சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் படத்தில் சசிக்குமார் நடித்தார். 2 படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இயக்குனர் சமுத்திரக்கனி தொடர்ந்து நெறஞ்ச மனசு சாட்டை அப்பா வினோதய சித்தம் நிமிர்ந்து நில் நாடோடிகள் 2 உள்ளிட்ட சில படங்களை டைரக்ட் செய்தார். இயக்குனராக மட்டுமின்றி சமுத்திரக்கனி பல படங்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார்.
அதுமட்டுமின்றி நடிகர் சமுத்திரக்கனி சிறந்த பின்னணி குரல் கலைஞர். வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தில் நடிகர் கிஷோருக்கு டப்பிங் பேசியவர் சமுத்திரக்கனி தான். அதுமட்டுமின்றி அவரது படங்களில் பின்னால் வாய்ஸ் ஓவர் குரலாக ஒலிப்பதும் பெரும்பாலும் சமுத்திரக்கனி குரலாக தான் இருக்கும்.
கதாநாயகன் வில்லன் குணச்சித்திரம் என எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் சமுத்திரக்கனியின் அழுத்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. நல்ல இயக்குனராக நல்ல நடிகராக தொடர்ந்து தமிழ் சினிமாவில் சமுத்திரக்கனி இருந்து வருகிறார். சமூக சிந்தனையாளராக அவர் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்கிறார்.
சமீபத்தில் பள்ளி விழா ஒன்றில் பங்கேற்ற நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி பேசியதாவது, சாட்டை அப்பா போன்ற படங்கள் எல்லாம் உடனே ரசிகர்களிடம் போய் சேராது. நீங்கள் எல்லாம் சூப்பர் ஸ்டார் படங்கள் என்றால் முதல் காட்சிக்கு போவீங்க. இந்த மாதிரியான படங்களுக்கு எல்லாம் வருவீங்களா?
அப்பா சாட்டை மாதிரியான நல்ல படங்களை எல்லாம் தாமதமாக டிவியில் பார்த்துவிட்டு நல்லா இருக்குதுன்னு சொல்லிட்டு போயிடுவீங்க. ஆனால் இதுபோன்ற படங்களுக்கான உழைப்பு மிகப்பெரியது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக நான் சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் வைத்துதான் அப்பா படத்தை எடுத்தேன். ஆனால் அந்த படம் எனக்கு நஷ்டத்தை தான் கொடுத்தது என்று சமுத்திரக்கனி பேசியிருக்கிறார்.





