மெட்டிஒலி திருமதி செல்வம் உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சஞ்சீவ். இவர் நடிகர் விஜயின் நெருக்கமான நண்பர்களில் ஒருவர். பத்ரி உள்ளிட்ட சில படங்களில் நடிகர் விஜய் உடன் சஞ்சீவ் இணைந்து நடித்திருக்கிறார். சமீபத்தில் நடந்த முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் நடிகர் சஞ்சீவ் தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.
இந்நிலையில் சென்னையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, எனக்கும் முதல்வர் விஜய்க்கும் 35 ஆண்டுகளாக நட்பு நீடிக்கிறது. கல்லூரியில் நாங்கள் படித்தபோது பல ஆசைகள் எதிர்கால கனவுகள் பற்றி பேசியிருக்கிறோம். ஆனால் அப்போது முதல்வர் கனவு குறித்து விஜய் என்னிடம் எதுவும் பேசியது இல்லை.
பல தடைகளை கடந்து சினிமாவில் விஜய் ஜெயித்தார். பெரிய இடத்துக்கு வந்தார். இப்போது தமிழகத்தின் முதல்வராகவும் ஆகிவிட்டார். சினிமாவில் சந்தித்ததை விட அரசியலில் கொஞ்சம் நிறைய தடைகள் பிரச்னைகள் உள்ளன. அந்த எதிர்ப்புகளை தடைகளை எல்லாம் அவர் முறியடிப்பார். மக்கள் நினைத்ததை எல்லாம் அவர் நிறைவேற்றுவார்.
நிச்சயமாக மக்களை விஜய் எப்போதுமே ஏமாற்ற மாட்டார். என்னை பொறுத்தவரை இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாடு சிங்கப்பூர் ஆக மாறிவிடும். சிங்கப்பூரில் மருத்துவம் பாதுகாப்பு கல்விக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. அதேபோல் தமிழகமும் சந்தோஷமான நல்ல நிலைக்கு மாறிவிடும் என்று நடிகர் சஞ்சீவ் கூறினார்.
அப்போது முதல்வர் விஜய் அரசியல்வாதியாக இருக்கும்போது பேண்ட் சட்டை டிரஸ் கோடில் இருந்தார். முதல்வராக பதவியேற்ற போது காஸ்டியூம் ஸ்டைல் கோட் ஆக மாறியது ஏன் என்று அவரிடம் கேட்கப்பட்டது. இந்தியாவில் எந்த முதல்வரும் கோட் அணிவதில்லை. விஜய் எப்போதுமே ட்ரெண்ட் செட்டர். அதை உடைகளிலும் அவர் கடைபிடிக்கிறார் என்று சஞ்சீவ் கூறினார்.
மேலும் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக வேட்பாளராக நீங்கள் போட்டியிடுவீர்களா அல்லது தவெக ராஜ்யசபா எம்பியாக போட்டியிடுவீர்களா என்று நடிகர் சஞ்சீவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், அதெல்லாம் சூழ்நிலையை பொறுத்து இருக்கிறது. இப்போது அதைப்பற்றி நான் யோசிக்கவில்லை. அனைத்தையும் காலம்தான் முடிவு செய்யும் என்று கூறினார்.





