ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டெட் நகைச்சுவை நடிகராக இருந்தவர் சந்தானம். தனது டைமிங் மற்றும் ரைமிங் காமெடியால் பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த சந்தானம், மூத்த நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவையில் கலக்கினார். ஆனால் திடீரென, நகைச்சுவை நடிகர் என்ற பிம்பத்தை உடைத்துக் கொண்டு ஹீரோவாக உருவெடுத்தார் சந்தானம்.
இதில் ரசிகர்களுக்கு இப்போது வரை முழு திருப்தி இல்லை என்று தான் கூற வேண்டும். அதற்காக அவர் ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் கை கொடுக்கவே இல்லை என்று சொல்லிவிட முடியாது. சந்தானம் ஹீரோவாக நடித்த சில படங்களில், மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இதில் குறிப்பாக தில்லுக்கு துட்டு படத்தை கூறலாம்.
இதன் முதல் மற்றும் இரண்டாம் பாகம் இரண்டுமே ரசிகர்களால் பேசப்பட்டது. பாரிஸ் ஜெயராஜ், ஏ1 போன்ற திரைப்படங்களும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன. ஆனால் இடையே அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் படுதோல்வியை சந்தித்தன.
சந்தானத்தின் திரையுலக பயணம் அவ்வளவுதான் என்று பலரும் கூறிவந்த சூழலில், அவருக்கு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது டிடி ரிட்டன்ஸ். நகைச்சுவையில் பட்டையை கிளப்பிய இந்த திரைப்படம், ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அடுத்து வெளிவந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படமும் சந்தானத்திற்கு வெற்றியை கொடுத்தது.
இந்த நிலையில் 13 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட மதகஜராஜா அண்மையில் வெளியாகி வரவேற்பு பெற்ற சூழலில் அதில் நகைச்சுவை நடிகராக இடம்பெற்று இருந்த சந்தானத்தின் காமெடியை பலரும் ரசித்தனர். தொடர்ந்து அவர் நகைச்சுவை நடிகராகவே வேண்டும் என்று பலரும் கூறி வந்தனர். இப்படியான சூழலில்தான் தற்போது சிம்புவுடன் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் சந்தானம். பார்க்கிங் இயக்குனர் ராம்குமார் இதனை இயக்குகிறார்.
இந்த திரைப்படத்திற்காக சந்தானத்திற்கு 17 கோடி சம்பளம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார் சந்தானம். இந்த ட்ராக்கில் வருமானம் அதிகம் கிடைப்பதால், ஏற்கனவே தான் ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்ட இரண்டு திரைப்படங்களில் இருந்து அவர் விலகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இதே ரூட்டில் பயணம் செய்ய அவர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.





