தமிழ் சினிமாவில் புதிதாக எந்த படம் ரிலீஸானாலும் முதல் நாளில் முதல் காட்சி பார்த்தவுடன் அந்த படம் குறித்த ரிவ்யூ இணையதளங்களில் வெளியாகி விடுகிறது. முதல் காட்சி படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள், படம் குறித்து நெகட்டிவ் விமர்சனங்களை கூறி விடுகின்றனர். பெரும்பாலான புதிய படங்கள் ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே எதிர்மறை விமர்சனங்களை சந்திப்பது அந்த படத்தின் வெற்றியை வசூலை கடுமையாக பாதிக்கிறது.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு பட விழாவில் பங்கேற்ற நடிகர் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், ஒரு கோரிக்கையை முன்வைத்து பேசியிருந்தார். அதாவது புதிய படங்கள் ரிலீஸாகி திரைக்கு வரும்போது 3 நாட்களுக்கு மட்டும் தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், தயாரிப்பார்கள், தியேட்டர் வளாகத்துக்குள் படம் குறித்து விமர்சிப்பவர்களை ரிவ்யூ செய்பவர்களை அனுமதிக்காதீர்கள்.
அப்படி அவர்கள் வரவிடாமல் தடுத்தால், படங்கள் 3 நாட்களுக்காவது தங்கு தடையின்றி ஓடும். படம் பார்க்க ரசிகர்களும் வருவார்கள். இப்படி முதல் நாள் முதல் காட்சி பார்ப்பவர்கள் அந்த படம் குறித்து சொல்லும் எதிர்மறை விமர்சனங்களால் அந்த படத்தை அடுத்த காட்சிக்கே ரசிகர்கள் பார்க்க வருவதில்லை. இதனால் பலத்த பாதிப்பும் நஷ்டமும் ஏற்படுகிறது என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் சரவணன் கூறியதாவது, நடிகர் விஷால் இப்படி சொல்வது கண்டிப்பாக தவறு. கண்டிப்பாக அவர் இப்படி பேசியிருப்பது தவறு. அதை நான் மறுக்கவே மாட்டேன். நான் தோற்றம் என்ற ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அந்த படத்தை ரிவ்யூ செய்தால்தான் அந்த படமே வெளியே தெரியும்.
விஷால் சார் மாதிரி கோடிக்கணக்கில் பட்ஜெட்டில் படம் பண்ணுகிறவர்களுக்கு எல்லாம் அது தேவைப்படாது. ஆனால் சின்ன படங்களை எடுக்கிறவர்களுக்கு கண்டிப்பாக படம் வெளியான உடன் ரிவ்யூ என்பது அவசியமாக தேவை என்று அந்த நேர்காணலில் நடிகர் சரவணன் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சங்க பொதுச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் நடிகர் விஷால் கூறியிருக்கும் இந்த கருத்துக்கு, தமிழில் பிரபல நடிகராக இருந்து வரும் சரவணன் எதிர்ப்பு தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விஷால் சொன்ன இந்த கோரிக்கையை திரைப்பட துறை சார்ந்த யாருமே கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில் வெளியான தலைவன் தலைவி மாரீசன் உள்ளிட்ட படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் தியேட்டர் வாசல்களில் ரிவ்யூ தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.





