சுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நடிகர் சசிக்குமார். அந்த படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவான நாடோடிகள் படம் சசிக்குமாருக்கு பெரிய அடையாளத்தை அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது. அவரது இயல்பான பேச்சும் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தொடர்ந்து பல படங்களில் நடித்த சசிக்குமாருக்கு சுந்தரபாண்டியன் குட்டிப்புலி ஈசன் போராளி கொடிவீரன் தாரை தப்பட்டை கருடன் உடன் பிறப்பே கிடாரி அயோத்தி போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தந்தன. குறிப்பாக பேட்ட படத்தில் ரஜினியுடன் சசிக்குமார் நடித்திருந்தார். நடிகராக மட்டுமின்றி பல படங்களை சசிக்குமார் சொந்தமாக தயாரித்தும் இருக்கிறார்.
சமீபத்தில் சசிக்குமார் சிம்ரன் நடிப்பில் வெளியாகி உள்ள டூரிஸ்ட் பேமிலி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அயோத்தி படத்துக்கு பிறகு சசிக்குமாருக்கு இந்த படம் பெரிய கம்பேக் தந்திருக்கிறது. எமோஷனல் பேமிலி சப்ஜெக்ட் படமாக இது ரசிகர்களின் மனதை கவர்ந்த ஒரு படைப்பாக அமைந்திருக்கிறது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் சசிக்குமார் கூறியதாவது, முதல் படம் மட்டுமே நான் தயாரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்புறம் நானே சில படங்களை விரும்பி தயாரித்தேன். இதில் யாரையும் குற்றம் சுமத்த முடியாது. நம்முடைய தவறை நாம்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு வெற்றி வரும்போது அதை நமக்குன்னு எடுத்துக்கறோம். ஆனால் தோல்வி வரும்போது அதை அடுத்தவங்களுக்கு கடத்திவிடுகிறோம். அதனால் தயாரிப்பு விஷயத்தில் நடந்த தோல்விகளுக்கு நானே பொறுப்பெடுத்துக்கிறேன். அதை சரிசெய்வதும் என்னுடைய வேலைதான்.
ரஜினி சாரே எனக்கு அட்வைஸ் பண்ணியிருக்கிறார். நீங்க புரடியூஸ் பண்ணாதீங்க என்று. அவரே ஒரு கட்டத்தில் நீ புரடியூஸ் பண்ணாதே இப்படியே இரு என்று சொல்லியிருக்கிறார். ஒவ்வொருத்தருக்கும் ஒரு அனுபவம் இருக்கும். அவர் சொன்னார். ஆனால் நான் கேட்கலே. இப்போது இனிமேல் எந்த பாதிப்பும் இல்லாமல் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிந்துக் கொண்டேன் என்று நடிகர் சசிக்குமார் கூறியிருக்கிறார்.





