தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக இருப்பவர் சசிக்குமார். இயக்குனர் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவர் இயக்குனராக நடிகராக அறிமுகமான முதல் படம் சுப்ரமணியபுரம். பாலா அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இப்போதும் பிஸியாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.
தனது முதல் படம் சுப்ரமணியபுரம் குறித்து நேர்காணல் ஒன்றில் நடிகர் சசிக்குமார் கூறியதாவது, சுப்ரமணியபுரம் படத்தில் சுவாதி புதுமுகமாக அறிமுகமாகிறார். அவருக்கு தமிழும் தெரியாது. எனக்கும் முதல் படம். அதனால் அவர் நடிக்க தயங்குகிறார். வாரக்கணக்கில் யோசித்துக்கொண்டே இருக்கிறார். பலமுறை கேட்டும் அவர் படத்தில் நடிக்க ஓகே சொல்லவில்லை.
இந்த படம் உருவாகும் முன்பே கவிஞர் தாமரை கண்கள் இரண்டால் கண்கள் இரண்டால் பாடலை எழுதி தந்துவிட்டார். அந்த பாடல் எனக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. அதனால் அழகான கண்கள் கொண்ட நாயகிதான் என் படத்துக்கு வேண்டும். அப்போதுதான் அந்த பாட்டுக்கு சரியாக இருக்கும் என்பதில் நான் ரொம்பவும் ஆர்வமாக, பிடிவாதமாக இருந்தேன்.
அப்போது பிளஸ் 2 என்ற படத்தில் கே பாக்யராஜ் மகன் சாந்தனுவுக்கு, சாந்தினி என்பவர் ஜோடியாக நடித்திருந்தார். இப்போது நிறைய டிவி சீரியல்களிலும் நடிக்கிறார். அவரது கண்கள் அழகாக இருக்கும் என்பதால், அவரை சுப்ரமணியபுரம் படத்தில் நாயகியாக நடிக்க வைத்து விடலாம் என்ற முடிவுக்கே நான் வந்துவிட்டேன். கதையை கேட்ட சாந்தினியும் நடிக்க சம்மதம் சொல்லி விட்டார்.
ஆனால் அடுத்த நாள் அவரது அப்பா, இந்த படத்தில் சாந்தினி நடிக்க வேண்டாம் என்று மறுத்துவிட்டார். சாந்தினி, அவங்க அம்மா ஆர்வமாக இருந்தும் சாந்தினியின் அப்பா நோ சொல்லி விட்டார். இந்த நேரத்தில் சுவாதி, நாளை என் ஆபீஸ்க்கு வருவதாக தகவல் வந்தது. ஆனால் நேரில் வந்து வேண்டாம் என்று சொல்ல தான் வருகின்றனர் என்று எனக்கு அப்போது தெரியாது.
அவர்கள் மறுநாள் ஆபீஸ்க்கு வந்து விட்டனர். என்னை கதை சொல்ல சொன்னார்கள். எனக்கு கதை சொல்ல தெரியாது. இந்த பாட்டை கேளுங்கள் என்று கண்கள் இரண்டால் கண்கள் இரண்டால் பாட்டை கேட்க வைத்தேன். அந்த பாடலை கேட்டவுடன் சுவாதி மற்றும் அவரது பெற்றோருக்கு ஆர்வம் வந்துவிட்டது. பிறகு சுப்ரமணியபுரம் படத்தில் சுவாதி நடிக்க சம்மதித்தார் என்று சசிக்குமார் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





