படம் பார்க்கும் ரசிகர்களின் மனதை தொடும் ஒவ்வொரு படமும் நிச்சயம் பெரிய வெற்றிப் படங்களாகவே இருக்கின்றன. படம் பார்க்கும் ரசிகர்களை மட்டுமே கவனத்தில் வைத்து படத்தை இயக்கும் இயக்குனரும் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் தங்களது பாத்திரத்தில் முழு கவனம் செலுத்தி நடிக்கும்போது நிச்சயம் அந்த படம் பெரிய வெற்றியை பெறுகிறது.
ஹீரோவை திருப்திப்படுத்தவும் தயாரிப்பாளருக்கு லாபம் தரவும் திட்டமிட்டு யோசித்து உருவாக்கப்படும் திரைக்கதைகள் கமர்ஷியல் என்ற பெயரில் வெளிவந்தாலும் அந்த படங்கள் ரசிகர்களின் மனங்களை தொடுவதே இல்லை. அந்த படங்கள் வெறும் ஆரவார திரைக்கூச்சலாக மட்டுமே இருந்து விட்டு போகின்றன. இந்த வெற்றியை பொதுவான ரசிகர்கள் ரசிப்பது இல்லை.
அதே நேரத்தில் உணர்வுபூர்வமான யதார்த்தமான கதைக்களங்களில் உருவாகும் படங்கள் மிக எளிதாக பெரிய வெற்றியை பெறுகின்றன. தமிழ் சினிமா வரலாற்றில் அந்த குறிப்பிட்ட படங்களின் பெயர்களை உச்சரிக்க முடியாமல் தவிர்க்க முடியாத அளவுக்கு அந்த படங்களில் படைப்புத்திறன் உறுதியாக நின்றுவிடுகின்றன.
காக்கா முட்டை பார்க்கிங் சித்தா குட்நைட் லப்பர் பந்து குடும்பஸ்தன் சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் பேமிலி படங்கள் வரை அந்த வரிசையில் ரசிகர்களின் மனதில் நிலைத்து நின்ற படங்களாக இருக்கின்றன. பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் மற்றும் நடிகர் சசிக்குமார். அயோத்தி படத்தின் வெற்றிக்கு பிறகு இளம் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான படம் டூரிஸ்ட் பேமிலி.
கடந்த மே 1ம் தேதி இந்த படம் வெளியான இந்த படத்தில் சசிக்குமார் ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் ஒரு குடும்பம் என்னென்ன பிரச்சனைகளை, சவால்களை சந்திக்கின்றனர் என்பதை மையமாகக் கொண்டது இந்த கதை. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று மூன்றே வாரங்களில் 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்திருக்கிறது.
இதுகுறித்து நடிகர் சசிக்குமார் கூறியதாவது, இந்த படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் எப்படி முதலில் கதை சொன்னாரோ அதை அப்படியே படமாக்கி இருக்கிறார். அவர் சொன்னதை அப்படியே உள்வாங்கி நானும் நடித்தேன். அதனால் தான் இந்த படத்தின் மூலம் எனக்கு இவ்வளவு புகழ் கிடைத்திருக்கிறது. இதற்கு காரணமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்தும் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து இருக்கிறார். அவர் நடித்த அந்த கேரக்டர் இந்த படத்திற்கு உணர்வுபூர்வமான ஒரு பலத்தை கொடுத்தது என்று சசிக்குமார் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





