நடிகர் சசிக்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் டூரிஸ்ட் பேமிலி. இந்த படத்தில் முதன்முறையாக சசிக்குமார், சிம்ரன் கணவன் மனைவியாக நடித்திருந்தனர். அதிலும் 18 வயது மகனுக்கு அப்பாவாக சசிக்குமார் நடித்திருந்தார். 24 வயது ஆன இளம் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கிய இந்த முதல் படம் ரூ 80 கோடி வரை வசூலித்து பெரிய வெற்றியை சசிக்குமாருக்கு தந்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் அத்தி பூத்தது போல் எப்போதாவதுதான் இதுபோன்ற மிகச் சிறந்த படங்கள் வெளியாகின்றன. காக்கா முட்டை பார்க்கிங் குட்நைட் லப்பர் பந்து குடும்பஸ்தன் படங்களின் வரிசையில் டூரிஸ்ட் பேமிலி படமும் இணைந்திருக்கிறது. இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி ராஜமவுலி போன்ற பான் இந்தியா பட இயக்குனர்களே வெளிப்படையாக பாராட்டி இருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் மற்றும் இயக்குனராக சசிக்குமார் ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறார். சசிக்குமார் மலையாள படங்கள் சிலவற்றில் நடித்திருக்கிறார். அதனால் மலையாள நடிகர்கள் இயக்குனர்களுடன் நல்ல தொடர்பில் இருந்து வருகிறார். மலையாள இயக்குனர்களை பொறுத்த வரை எப்போதுமே தங்களது சொந்த ஊரை விட்டு வெளியேற மாட்டார்கள்.
அதாவது சினிமா தொழில் ஷூட்டிங் சார்ந்து பல மாதங்கள் வெளியூர்களுக்கு வந்தாலும் முக்கிய நகரங்களில் மாதக்கணக்கில் தங்கினாலும் தொழில் காரணங்களுக்காக தங்களது வீட்டை குடும்பத்தை சொந்த ஊரை விட்டு வெளியேற்ற மாட்டார்கள். படங்களை முடித்த பிறகு தங்களது ஊர்களுக்கு சென்று தங்கி விடுவதே அவர்களது வழக்கம்.
இந்த சொந்த ஊர் பாசத்தை புரிந்துக்கொண்ட நடிகர் சசிக்குமார், சென்னையில் இருந்த தனது வீடு மற்றும் அலுவலகத்தை தனது சொந்த ஊரான மதுரைக்கே சமீபத்தில் மாற்றி இருக்கிறார். இனி சினிமாவில் நடிப்பதற்காக மட்டுமே சென்னைக்கு வரும் சசிக்குமார், சில மாதங்களோ பல மாதங்களோ சென்னையில் வந்த வேலையை முடித்துவிட்டு மீண்டும் சொந்த ஊரான மதுரைக்கே சென்று விடுவார்.
ஏனெனில் சொந்த ஊரில் பிறந்தது முதல் வளர்ந்தது வரை என சொந்த பந்தங்கள் நிறைந்த ஊரில் உறவுகளுடன் வாழ்வதே வாழ்க்கையை அர்த்தப்படுத்தும். தொழில் மற்றும் வருமானம் சார்ந்து நகர வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் போது சொந்த ஊர் பாசத்தை சொந்தங்களின் அருகாமையை இழக்க நேரிடும் என்பதால் இப்படி ஒரு அதிரடி முடிவுக்கு சசிக்குமார் மாறியிருக்கிறார். இதை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.





