தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். அவரது பெயரில் ரா என்டிஆர் என்ற குழு ஓரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது ஊருவாடா என்ற தலைப்பில் பிரம்மாண்ட பிரச்சார தொடக்கம் ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்தது. மேலும் அதை தீவிரமாகவும் விளம்பரம் செய்கிறது. இதனால் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் அவர் தனது அரசியல் வருகையை அறிவிக்க உள்ளதாக கூறுகின்றனர்.
இதற்கு முன்பு ஜூனியர் என்டிஆரின் அரசியல் வருகை குறித்த பேச்சு பலமுறை எழுந்துள்ளது. அதற்கு காரணம் அவர் பாரம்பரிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தெலுங்கு தேசம் கட்சியை நிறுவிய முன்னாள் ஆந்திரா முதலமைச்சர் நடிகர் என்டி ராமராவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை நந்தமூரி ஹரிகிருஷ்ணாவும் தெலுங்கு தேசம் கட்சியுடன் தொடர்புடையவராக இருந்து மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியவர்.
அதே வேளையில் அவரது மாமாவும் நடிகர் பாலகிருஷ்ணா 3 முறை அந்தக் கட்சியில் எம்எல்ஏவாக இருந்துள்ளார். இதுபோக தற்போதைய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவருக்கு தாய்மாமா என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2009ம் ஆண்டு நடந்த ஆந்திரா சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தலின் போது தெலுங்கு தேசம் கட்சிக்காக ஜூனியர் என்டிஆர் பிரச்சாரம் செய்தார்.
ஆனால் அதற்கு பிறகு பெரிதாக அவர் அரசியலில் ஈடுபடவில்லை. முழுமூச்சாக சினிமாவில் கவனம் செலுத்தினார். தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் நடிகர் தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். அவர் சந்தித்த முதல் தேர்தலிலேயே திமுக அதிமுக கட்சிகளை ஓரம்கட்டி விட்டு அவர் முதல்வரானது தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
குறிப்பாக ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் பாஜக கூட்டணி அரசில் இடம் பிடித்துள்ள ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் துணை முதல்வர் பவன் கல்யாண், அடுத்த முறை முதல்வராக வரவேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகிறது. இதனால் தெலுங்கு பேசும் மற்றொரு மாநிலமான தெலுங்கானா அரசியலிலும் பவன் கல்யாண் தீவிரமாக களமிறங்கி இருக்கிறார். அதனால் இரு மாநில அரசியல் களத்திலும் அனல் பறக்கிறது. இந்த சூழலில் நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆந்திர அரசியலில் களம் இறங்குவதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
ஓரிரு வாரங்களில் தன்னார்வ தொண்டு அமைப்பை ஜூனியர் என்டிஆர் ஆரம்பிக்க உள்ளார். இதன் மூலம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சமூகப் பணியில் ஈடுபட உள்ளார். நடிகர் விஜயின் அனைத்து நகர்வுகளையும் ஜூனியர் என்டிஆர் உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது. விஜய் போலவே அரசியலில் வலுவாக கால் பதிக்கவும் ஜூனியர் என்டிஆர் காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இது ஆந்திராவில் உள்ள அரசியல் கட்சிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.





