தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பை பெற்ற படம் சுப்ரமணியபுரம். இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமானவர்தான் சசிக்குமார். அந்த படத்தில் அவரும் ஒரு நாயகனாக நடித்திருந்தார். அவருடன் நடிகர் ஜெய்யும் மற்றொரு நாயகனாக நடித்திருந்தார். சுவாதி கஞ்சா கருப்பு சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
சுப்ரமணியபுரம் படத்தை தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் படத்தில் சசிக்குமார் நடித்தார். இந்த படமும் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. தொடர்ந்து நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் என தமிழ் சினிமாவில் பல படைப்புகளை சசிக்குமார் தந்து வருகிறார். இந்த ஆண்டில் சசிக்குமார் சிம்ரன் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய வெற்றிப் படமாக இருந்தது.
இந்த படத்தில் நடித்ததற்காக சர்வதே திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் விருதும் சசிக்குமாருக்கு கிடைத்தது. மேலும் இதற்கு இயக்குனர் பாலா, சசிக்குமாருக்கு வாழ்த்து கடிதம் எழுதி பாராட்டி இருந்தார். அதற்கு காரணம் ஆரம்பத்தில் இயக்குனர்கள் பாலா மற்றும் அமீரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்தான் சசிக்குமார் என்பது பலரது அறியாத விஷயமாகும்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சசிக்குமார் கூறியதாவது, பாலா இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த சேது படத்தில் நான் உதவி இயக்குனராக பணிசெய்தேன். சேது படத்தில் விக்ரம் சார் மட்டும் பல கெட்டப்பில் நடிக்கலே. நானும் பண்ணி இருக்கேன். அது யாருக்குமே தெரியாது. அந்த படத்தில் வருகிற ஒரு சீனில், மனநல காப்பகத்தில் மொட்டை போட்ட நிறைய பேர் இருப்பாங்க.
அப்போ மொட்டை பத்தலை என்று என்னையும் மொட்டை போட்டு டவுசர் போட்டு கையில் தட்டு எல்லாம் கொடுத்து உட்கார வைத்து விட்டாங்க. வேற வழியில்லாம நானும் அந்த சீன்ல நடிச்சேன். நான்தான் அசிஸ்டன்ட் டைரக்டர். எல்லாத்தையும் பார்த்துக்க பாலா சார் என்கிட்ட சொல்லிட்டார். ஆனா நான் எதுனா சொன்னால், எவனும் கேக்க மாட்டேங்கறான். டேய் நீயும் என்னை மாதிரி நடிக்கத்தானே வந்திருக்கறேன்னு அங்க இருக்கறவங்க சொல்லிடுவாங்க.
நான் என்ன சொன்னாலும் எவனும் கேட்க மாட்டாங்க, எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. அப்போ அங்கு இருந்த கிளாப் போர்டை கையில் தூக்கி வச்சிக்கிட்டேன். எவனாவது என்னை கேட்டா, இங்க பாருடா நான்தான் அசிஸ்டென்ட் டைரக்டருன்னு சொல்லி கிளாப் போர்டை காட்டி அவர்களை மிரட்டி வேலை வாங்கினேன் என்று நடிகர் சசிகுமார் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





