சட்டம் என் கையில் படத்தில் நடித்து வில்லனாக அறிமுகமானவர் நடிகர் சத்யராஜ். தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்டிய சத்யராஜை, கடலோர கவிதைகள் படம் மூலம் கதாநாயகனாக மாற்றியவர் இயக்குனர் பாரதிராஜா. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தொடர்ந்து நாயகனாக சினிமாவில் தன் பயணத்தை துவங்கிய சத்யராஜூக்கு நடிகன், ரிக்ஷா மாமா, திருமதி பழனிசாமி, அமைதிப்படை, வால்டர் வெற்றிவேல், பிரம்மா, சின்னதம்பி பெரியதம்பி, தெற்கு தெரு மச்சான், பூ விழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, வில்லாதி வில்லன் என பல படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தது.
இப்போது குணச்சித்திர வேடங்களில் சத்யராஜ் அதிகமாக நடிக்கிறார். பாகுபலி படத்தில் அவரது கட்டப்பா கேரக்டரில் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. ஹீரோ, ஹீரோயின்களுக்கு அப்பாவாக நடிக்கும் சத்யராஜ் போலீஸ் அதிகாரியாக பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படங்களில் சத்யராஜ் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஒரு விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ் கூறியதாவது, நான் சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க, ஆனா அதுதான் உண்மை. நான் நடித்த எந்த படத்தையும் தியேட்டரில் போய் பார்த்தது இல்லை. அமைதிப்படை படத்தை இதுவரைக்கும் நான் தியேட்டரில் போய் பார்த்தது இல்லை. படத்தை பார்த்துட்டு வந்து சூப்பருன்னு சொல்வாங்க. அவ்வளவுதான். வால்டர் வெற்றி வேல் படத்தையும் தியேட்டரில் போய் பார்க்கவில்லை.
நான் நடித்த எந்த பெரிய படத்தையும் நான் தியேட்டரில் பார்த்தது இல்லை. படம் பார்க்கணும் என்ற டென்சனும் எனக்கு இருந்தது இல்லை. மிஸ்டர் பாரத் படம் ரிலீஸான டைம். நான் ஏவிஎம் கார்டன் ஸ்டுடியோவில் விடிஞ்சா கல்யாணம் படம் டப்பிங்கில் இருக்கிறேன். அப்போ ரஜினிகாந்த் அங்கு வந்தார். வாங்க சார் என்று நான் அவரை நான் அழைக்கிறேன். அப்போ அவர், சத்யராஜ் மிஸ்டர் பாரத் படம் பார்த்துட்டீங்களா, ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குதுன்னு எங்கிட்ட ரொம்ப ஆர்வமாக கேட்டார்.
நான் ஒண்ணும் விசாரிக்கலை, எப்படி இருக்குதுன்னு தெரியலை சார் என்றேன். என்ன, உங்களுக்கு உங்க படம் ரிலீஸ் பத்தி ஒரு டென்சன் இருக்காதான்னு ஆச்சரியமா கேட்டார். இல்லே சார், படம் நடிச்சுட்டோம். படம் நல்லா இருந்த 10 புரடியூசர்ஸ் வரப் போறாங்க. படம் நல்லா இல்லேன்னா ஒரு மாசத்துக்கு நம்ம வீட்டுப்பக்கம் யாரும் வர மாட்டாங்க, அவ்வளவுதான் என்று கூறிவிட்டேன், இவ்வாறு அந்த நிகழ்ச்சியில் சத்யராஜ் கூறியிருக்கிறார். இது உருட்டுதானே என ரசிகர்கள் அவரது பாணியில் கலாய்த்து வருகின்றனர்.





