தமிழ் சினிமாவில் கற்பனை வறட்சி தாண்டவமாடி கொண்டு இருக்கிறது. ஆயிரம் கோடி ரூபாய் வசூலை குறிவைக்கும் இயக்குநர்கள் பலரும், பழைய படங்களை, ஹாலிவுட் படங்களை, மற்ற மொழி படங்களை பார்த்து கதையை சுட்டு, அதை அப்படியே படமாக்குகின்றனர்.
அதாவது பக்கத்து வீட்டில் சமைத்த உணவை எடுத்து வந்து கொஞ்சம் காரம், உப்பு, புளி, மசாலா சேர்த்து நான் சமைத்த உணவுதான் என புது தட்டில் வைத்து பரிமாறுகின்றனர். இது மிகவும் கேவலமாக ஒரு செயலாக, மக்களை ஏமாற்றும், முட்டாளாக்கும் ஒரு அழுகுனி ஆட்டமாகவே இருக்கிறது.
துவக்கத்தில் சுந்தர் சி போன்றவர்களை தான், பழைய படங்களை காப்பியடித்து எடுக்கிறார் என்றார்கள். இப்போது அட்லி, லோகேஷ் கனகராஜ், மணிரத்னம் என அந்த வரிசை நீண்டுகொண்டே போகிறது. இயக்குநர்களிடம் சொந்த சரக்கு இல்லை என்பதையே இது காட்டுகிறது.
ஒரு வரி கதையை கூட ஒரு இயக்குநர் நினைத்தால் அதை இரண்டரை மணி நேர சுவாரசியமாக திரைக்கதையாக மாற்ற முடியும். அதற்கேற்ப சிந்தனை இருக்க வேண்டும். ஆனால் சட்டியில் இல்லாததால், அகப்பையிலும் ஒன்றுமில்லை என்பதுதான் இன்றைய இயக்குநர்களின் அவல நிலை.
லியோ, ஜவான், ஜெயிலர் உட்பட எல்லாமே, பழைய படங்களில் காப்பிதான். இனி வரவிருக்கும் விஜய் 68, தக்லைப் படங்களுக்கும் அப்பட்டமாக ஹாலிவுட் படங்களின் காப்பிதான். அதற்கு தான் நூறு நூறு கோடியாக ரசிகர்கள் பணத்தை கொட்டி, இயக்குநர்களை, நடிகர்களை வாழ வைக்க போகின்றனர்.
ஒருமுறை, செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்ஹாசனிடம் தேவர்மகன் படம் தவிர, பெரும்பாலான உங்கள் படங்கள் காப்பியடித்த படங்களாகவே இருக்கின்றன என கேட்கப்பட்டுள்ளது. அதற்கு கமல், தேவர்மகன் படமும் வீரபாண்டியன் என்ற நாவலில் இருந்து எடுத்த எழுதப்பட்ட கதைதான் என்ற உண்மையை கூறியிருக்கிறார். தேவர்மகன் படத்தின் திரைக்கதை ஆசிரியர் கமல்தான். ஆக, இப்படி சொல்லாமல் மறைக்கப்பட்ட உண்மை கதைகள் தமிழ் சினிமாவில் எத்தனையோ தெரியவில்லை.





