தமிழ் சினிமாவில் இயக்குனர் ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகராக வலம் வந்தவர் வேலு பிரபாகரன். 68 வயதான நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த 18ம் தேதி அவர் காலமானார். இவர் பெரியார் சிந்தனை கொண்டவராக இருந்தார். அவரது மறைவை அடுத்து சென்னை சாலிகிராமத்தில் வேலு பிரபாகரனின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் சத்யராஜ் பாடகர் அந்தோணி தாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது, இயக்குனர் வேலு பிரபாகரன் கொடுத்த பெரியார் புத்தகம்தான் என்னை சிந்திக்க தூண்டி பகுத்தறிவாளனாக மாற்றியது. வேலு பிரபாகரன் எம்ஜிஆரின் ரசிகர். எம்ஜிஆரை போன்று பலமுறை என்னிடம் நடித்துக் காட்டி இருக்கிறார். கடந்த 1988ம் ஆண்டு வெளிவந்த பிக்பாக்கெட் என்ற படத்தில் அவருடன் இணைந்து நான் பணியாற்றியுள்ளேன்.
இங்குள்ள நிறைய பேருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. மகிழ்ச்சியாக இருப்பதற்கு கடவுளை வணங்க வேண்டாம். பொருளாதாரம் தவிர எனக்கும் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. அதை சமாளிப்பதற்கு கடவுள் மறுப்பு கொள்கை எனக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கிறது.
ஒரு சிலர் என்னை இந்து கடவுள் நம்பிக்கைகளுக்கு மட்டும்தான் நான் எதிரானவன் என்று நினைக்கிறார்கள். ஆனால் நான் அனைத்து கடவுள் நம்பிக்கைகளுக்கும் எதிரானவன். சமூக வலைதளங்கள் மூலம் பெரியார் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று அந்த நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசியிருக்கிறார்.
நடிகர் சத்யராஜ் சினிமாவில் கடவுள் நம்பிக்கை உள்ளவராக பல காட்சிகளில் நடித்திருக்கிறார். நெற்றியில் விபூதி இல்லாமல் அவர் பல படங்களில் நடித்தது இல்லை. அதேபோல் அவரது குடும்ப நிகழ்ச்சிகளிலும் கடவுளை முன்னிறுத்திய பல பூஜைகள் விசேஷங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அவர் குடும்பத்தைச் சார்ந்த பலரும் கடவுள் நம்பிக்கையாளராக கோயில்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் நடிகர் சத்யராஜ் மட்டும் தன்னை பகுத்தறிவாதி என்றும் கடவுள் நம்பிக்கைகளுக்கு எதிரானவன் என்றும் பேசிக் கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளம்பியுள்ளது. இவர் சினிமாவில் நடிப்பதற்காக கடவுள் மறுப்பாளராக வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார் என்று பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நடிகர் சத்யராஜின் பேச்சு இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.





