நகைச்சுவை நாயகன் என்ற பிம்பத்தை தூக்கி எறிந்து விட்டு முழுக்க முழுக்க கதாநாயகனாக மாறியிருக்கிறார் சந்தானம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படம்தான் சந்தானம் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம். அது திரையரங்குகளில் வெளியாகி ஓரளவு வரவேற்பையும் பெற்றது.
பிறகு அங்கிருந்து தனது பயணத்தை ஒரே திசையில் செலுத்தினார் சந்தானம். கதாநாயகன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தாலும் அதில் காமெடிக்கு பஞ்சம் இல்லாத வகையில் படம் இருக்கும் அளவுக்கு அவர் பார்த்துக் கொண்டார். இதில் குறிப்பிட்ட தக்க சில திரைப்படங்களில் சந்தானம் வெற்றியும் கண்டார்.
உதாரணமாக நாம் தில்லுக்கு துட்டு திரைப்படத்தைக் கூறலாம். அதன் முதல் இரண்டு பாகங்களும் திரையரங்குகளில் பெரும் வரவேற்பு பெற்றது. சந்தானத்தின் கவுண்ட்டர் காமெடிகளை பலரும் ரசித்தனர். இதேபோல் ஏ ஒன் பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட திரைப்படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றன. அந்த திரைப்படத்தின் காமெடிகள் இணையத்திலும் பேசு பொருள் ஆகின.
ஆனால் தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடித்து வந்த திரைப்படங்கள் ஏனோ திரையரங்குகளில் ஓடவே இல்லை. சில படங்கள் திரையரங்குகளில் வந்தது கூட பலருக்கு தெரியாமல் போனது. இப்படியான சூழலில் தான் அவருக்கு, டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் கை கொடுத்தது. நகைச்சுவை பட்டாசுகளாய் வெடித்து சிதறிய அந்த திரைப்படம் சந்தானத்திற்கு கம் பேக் மூவியாக அமைந்தது.
தொடர்ந்து, வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் சந்தானத்திற்கு வெற்றியை கொடுத்தது. இப்படியான சூழலில் சந்தானம் தற்போது, டிடி நெக்ல்ஸ் லெவல் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆர்யா தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியிருக்கிறார். இதில் முக்கியமாக செல்வராகவன் மற்றும் கௌதம் மேனன் என இரண்டு இயக்குனர்கள் நடித்திருக்கிறார்கள்.
வரும் 16ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் சூழலில் தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்திலிருந்து ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. காமெடியில் சந்தானம் அடித்து துவைத்து இருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது. அது மட்டுமல்லாமல் டிரைலரின் இறுதியில் காக்க காக்க படத்தின் உயிரின் உயிரே பாடலுக்கு கௌதம் மேனன் நடனமாடும் காட்சி பலரையும் குதூகளிக்க வைத்திருக்கிறது.





