மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் மம்முட்டி. இப்போது 70 வயது கடந்தும் அவர் படங்களில் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருக்கிறார். தமிழில் நடிகர் ரஜினிகாந்தை போல மலையாளத்தில் நடிகர் மம்முட்டி சீனியர் நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். சமீபகாலமாக அவரது உடல்நிலை பாதிப்பில் ஷூட்டிங்கில் பங்கேற்கவில்லை.
தமிழ் சினிமாவில் நடிகர்கள் ரஜினியும் கமலும் எப்படி நெருங்கிய நண்பர்களோ அதே போல் மலையாள சினிமாவில் நடிகர்கள் மம்முட்டியும் மோகன்லாலும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். சமீபத்தில் மம்முட்டி உடல் நலம் பாதித்த போது, நடிகர் மோகன்லால் சபரிமலைக்கு இருமுடி கட்டிச் சென்று தனது நண்பர் மம்முட்டிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தது குறிப்பிடத்தக்கது.
மலையாளத்தில் மட்டுமின்றி நடிகர் மம்முட்டி தமிழிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் தளபதி படத்தில் நடிகர் ரஜினிக்கு நண்பராக மம்முட்டி நடித்திருந்தார். தொடர்ந்து தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மறுமலர்ச்சி மக்கள் ஆட்சி அரசியல் ஆனந்தம் மௌனம் சம்மதம் அழகன் வந்தே மாதரம் கார்மேகம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
கிளிப்பேச்சு கேட்கவா புதையல் எதிரும் புதிரும் பேரன்பு என மம்முட்டி பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார். தமிழில் ரஜினியுடன் நடிக்க சில வாய்ப்புகள் வந்தும் இரண்டு பேருமே சூப்பர் ஸ்டார்கள் என்பதால் இமேஜ் பாதிக்கலாம் என்பதால் இருவரும் இணைந்து நடிக்காமல் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு மம்முட்டி என்ன செய்துக்கொண்டு இருந்தார் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அவர் நடிகராக வருவதற்கு முன்பு வக்கீலாக 3 ஆண்டுகள் கோர்ட்டில் பணி செய்திருக்கிறார். பிஏ., எல்எல்பி படிப்புகளை முடித்த பிறகு அவர் 3 ஆண்டுகள் வக்கீலாக இருந்திருக்கிறார். அதன்பிறகுதான் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார்.
சினிமாவில் நடிகராகி பிரபலமான பிறகு அவர் வக்கீல் தொழிலையே மறந்துவிட்டார். ஒருவேளை அவர் நடிகராக வராமல் இருந்திருந்தால் பெரிய கிரிமினல் வக்கீலாக மாறியிருக்க வாய்ப்புள்ளது. தமிழில் அவர் நடித்த மௌனம் சம்மதம் என்ற படத்தில் வக்கீல் கேரக்டரில் கோர்ட் காட்சிகளில் கேள்வி மேல் கேள்வியாக கேட்டு நடந்த உண்மைகளை வெளியே கொண்டு வருவார். நிஜத்திலும் அவர் ஒரு வக்கீலாக இருந்தவர் என்பது ரசிகர்களுக்கு ஆச்சரியம் தரும் ஒரு தகவலாக தான் உள்ளது.





