நடிகர் கமல்ஹாசனுக்கு 2022 ஆம் ஆண்டு விக்ரம் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற, சந்தோஷத்தில் படக்குழுவினருக்கு பரிசுகளை அளித்தார் கமல்ஹாசன். ஆனால் கடந்த ஆண்டு அவருக்கு எந்த திரைப்படமும் வெளியாகவில்லை.
இப்படியான சூழலில் கமல்ஹாசனுக்கு அடுத்ததாக இந்தியன் 2 திரைப்படம் ரெடியாகி உள்ளது. சங்கர் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படம், ஜூன் மாதம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக உலகநாயகன் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். இருவர் கூட்டணியில் வெளியான நாயகன் திரைப்படம், இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த திரைப்படம் வெளிவந்து 35 ஆண்டுகளுக்கு பிறகு தான் மீண்டும் மணிரத்னம் கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து இருக்கிறார்கள்.
இதனால் இந்த கூட்டணியை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இதில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டார்கள்.
இது போக நாசர் அபிராமி உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்று இருந்தனர். சூட்டிங் தொடங்கிய சூழலில், தேர்தல் பரப்புரைக்காக கமல்ஹாசன் அதனை தள்ளிப் போட்டார். இதன் காரணமாக கால்ஷீட் கொடுக்க முடியாததால் துல்கர் சல்மான் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஜெயம் ரவியும் படத்திலிருந்து விலகினார். இந்த நிலையில் துல்கர் சல்மான் கதாபாத்திரத்திற்கு, சிம்புவை மணிரத்னம் நடிக்க வைக்க முடிவு செய்து இருக்கிறார்.
இதற்கான டெஸ்ட் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. இதேபோல் ஜெயம் ரவி கேரக்டருக்கு அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படியான சூழலில் தக் லைப் திரைப்படத்திலிருந்து சித்தார்த்தும் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அவர் எந்த காரணத்துக்காக விலகினார் என்று தெரியவில்லை. இந்த தகவல் தற்போது வெளியாகி இருக்கும் சூழலில், முதலில் அவர் படத்தில் இருந்தாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





