தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகர் வடிவேலு. கடந்த 1990 முதல் 2010ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் அவர் ஏராளமான படங்களில் காமெடி நடிப்பில் வெளுத்து வாங்கினார். ஒரு நாள் சம்பளமாக ரூ. 12 லட்சம் வரை வடிவேலு வாங்கியது குறிப்பிடத்தக்கது. வடிவேலு கால்ஷீட் கிடைப்பதே தயாரிப்பாளர்களுக்கு பெரும்பாடாக இருந்த காலகட்டம் அது.
ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு சில விவகாரங்களில் சிக்கிக்கொண்ட நடிகர் வடிவேலு, 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். இப்போது செகண்ட் ரவுண்டில் இருக்கும் வடிவேலு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே அவருடன் பல படங்களில் காமெடி செய்த நடிகர் சிங்கமுத்துவுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை கோர்ட் வழக்கு வரை சென்று விட்டது. அதனால் இருவரும் பல ஆண்டுகளாக சேர்ந்து நடிப்பதும் இல்லை.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் நடிகர் சிங்கமுத்து கூறியதாவது, இப்போதும் சொல்கிறேன். நடிகர் வடிவேலு மனம் மாறி வருந்தி திருந்தி நல்ல மனிதனாக மாற வேண்டும். நீ நல்ல மனுஷனோ, கெட்ட மனுஷனோ ஆனா வெளியுலகத்துக்கு நீ அப்பாவி மாதிரி நல்ல மனுஷன் மாதிரி தெரியுது. அதை அப்படியே மெயின்டெயின் பண்ணு. உன்னோட உண்மையான சுயரூபம் தெரியாமல் காப்பாத்திட்டு போயிடு என்று சொல்கிறேன்.
வருகின்ற காலத்தில் நடிகர் வடிவேலு அழைத்தால் நான் வரத் தயார். திரையில் பார்க்கலாம். இரண்டு பேரும் இணைந்து நடிப்போம். அப்படி நடிக்கும்போது அவரை நான் எதிரியாக நினைக்க மாட்டேன். அந்த சீன் என்ன என்றுதான் பார்ப்பேன். ஆனால் அவர் அழைக்க வேண்டும்.
இந்த நேர்காணல் மூலமாக உங்கள் மூலமாக நான் கேட்டுக்கொள்கிறேன். வடிவேலு உன்கூட நான் சேர்ந்து நடிக்கிறேன் அய்யா. ஏய்யா பழசெல்லாம் விட்ருய்யா. போதுமா, ஏனென்றால் நான் இறப்பதற்குள், என் உடல் மறைந்து போவதற்கு முன்னால் எனக்கு எதிரி என்றோ சண்டை என்றோ எதுவும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.
சிவாய நமஹ என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். சண்டை என்று யாரோடும் இல்லாமல் எல்லோரும் சகோதரர்களாக வாழுகின்ற காலம் வரை நான் மனிதனாக இருந்தேன் என்பதற்கு கடவுள் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இதற்காக நான் சரண்டர் ஆயிட்டேன் என்று வடிவேலு நினைத்துவிட வேண்டாம். கடவுளிடம் மட்டும்தான் நான் சரண்டர் ஆவேன் என்று நடிகர் சிங்கமுத்து அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





