நடிகர் சூரி துவக்கத்தில் சில படங்களில் காமெடி காட்சிகளில் துணை நடிகராக காணப்பட்டார். வெண்ணிலா கபடிக்குழு படத்தில் 50 பரோட்டா சாப்பிடும் போட்டியில் காமெடி காட்சியில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை, கவனத்தை பெற்றார். தொடர்ந்து பல படங்களில் காமெடி ரோலில் நடித்து பிரபலமானார்.
குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, மனம்கொத்தி பறவை, சுந்தரபாண்டியன், அண்ணாத்த, ஜில்லா, வேதாளம் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வெற்றி பெற்றார். அவரை நாயகனாக விடுதலை படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் நடிக்க வைத்தார்.
விடுதலை படத்தில் சூரிக்கு கிடைத்த பலத்த வரவேற்பை தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் படத்தில் சொக்கன் என்ற கேரக்டரில் சூரி நடித்திருந்தார். இதில் சசிக்குமாரும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி என்ற படத்திலும் சூரி நடித்தார்.
ஆனால், கொட்டுக்காளி படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. கூழாங்கல் பட இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் படம் என்பதால், ரசிகர்கள் பலத்த ஆர்வமாக எதிர்பார்த்த இந்த படம் அதிருப்தியை தந்துவிட்டது.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் தொடர்ச்சியாக விடுதலை 2 படம் வருகிற 20ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிக்காக சூரி, நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் ஒரு முக்கிய விஷயத்தை சொல்லி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். 4 படங்களே நடித்த நிலையில் அவரது இந்த திடீர் முடிவு சரிதானா என்ற சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து நடிகர் சூரி கூறுகையில், நான் விரைவில் டைரக்டராக போகிறேன். என் அப்பா அம்மா வாழ்க்கையை படமாக எடுக்கப் போகிறேன். அப்பா முத்துசாமி, அம்மா செங்கை அரசி வாழ்க்கையை படமாக இயக்க திட்டமிட்டுள்ளேன். இது சொல்வதற்கு சாதாரணமாக இருந்தாலும் ஷேர் செய்ய நிறைய விஷயங்கள் உள்ளது. என் அப்பா தற்போது இல்லை என்றாலும், பொறுமையாக இருந்து நான் வெற்றி பெற அவர்தான் காரணம். என்னை அப்பா சிங்கக்குட்டி என அடிக்கடி கூறுவார் என்றும் கூறியிருக்கிறார்.





