தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடிக்க துவங்கி இப்போது கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் சூரி. விடுதலை விடுதலை 2 கருடன் கொட்டுக்காளி மாமன் ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள படம் மண்டாடி. இராமநாதபுரம் மாவட்டம் கடல் பின்னணியில் பாய்மர படகு போட்டியை மையப்படுத்தி இந்த படத்தின் கதை அமைந்துள்ளது.
இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இந்த படம் வரும் செப்டம்பர் 10ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற படத்தின் நாயகன் நடிகர் சூரி பேசியதாவது, சில வார்த்தைகளை எத்தனை முறை சொன்னாலும் சலிக்காது. இன்றைக்கு எனக்கு கிடைக்கக்கூடிய இந்த விசிலும் கைதட்டலும் அனைத்தும் வெற்றிமாறனுக்கு தான் போய் சேரும்.
நான் இதுவரை வந்ததற்கும் இதற்கு மேல் போகப் போவதற்கும் காரணம் அவர்தான். எவ்வளவு புயல் காற்று வந்தாலும் நீங்கள் போட்ட விதை முளைத்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு மேல் பலத்த காற்று கூட அடிக்கலாம். எது வந்தாலும் அந்த செடி ஒடியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இளையராஜா பெரிய ஹீரோக்களுக்கு இசையமைப்பார். சிறிய ஹீரோக்களுக்கும் இசையமைத்து கொடுப்பார்.
அவரால் பல இயக்குனர்கள் உருவாகி இருக்கிறார்கள். அதே போல் ஜீவி பிரகாஷ் குமாரும் அனைவருக்கும் பாடல்கள் போட்டு கொடுத்து இயைமைத்து வருகிறார். இந்த படத்தில் ரிஸ்க் இல்லை. ரிஸ்க்கையே படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினேன். இந்த படத்தை எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது.
ஆனால் இராமநாதபுரம் சுற்றுவட்டார ஊர் மக்கள் எங்களுக்கு அவ்வளவு ஆதரவு கொடுத்தார்கள். அவர்கள் ஒரு நாள் வராமல் இருந்திருந்தால் கூட இந்த படம் கண்டிப்பாக வந்திருக்காது. என் குடும்பம் இப்போதும் என்னுடன் வந்திருக்கிறது. நான் இந்த இடத்தில் நிற்பதற்கு என் குடும்பம் தான் காரணம். என் அம்மா இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்கள்.
அவர் காரில் வரும்போது கூட ஒரு காலத்தில் 300 ரூபாய் வாடகை கொடுக்கக்கூட காசு இல்லாமல் அழுது இருக்கிறான். ஆனால் இன்றைக்கு அவனுக்காக இத்தனை பேர் போஸ்டர் அடிச்சு ஒட்டி இருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டே வந்தார். எங்க அம்மா என்னுடைய சாமி. அவருக்கு நான் நன்றி சொல்ல முடியாது என்று நடிகர் சூரி பேசினார்.





