இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்த விடுதலை படம் தந்த அபார வெற்றி, அடுத்து இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி சொக்கன் கேரக்டரில் நடித்த கருடன் படத்துக்கு கிடைத்த பலத்த வெற்றியை தொடர்ந்து 3வது முறையாக சூரி நாயகனாக நடித்துள்ள படம் கொட்டுக்காளி, இன்று ரிலீஸாகி இருக்கிறது.
இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்க, கூழாங்கல் படத்தின் இயக்குனர் வினோத் ராஜ் இயக்கி உள்ளார். சூரி நாயகனாகவும், அன்னா பென் நாயகியாகவும் நடித்துள்ளார். இந்த படத்தில் மிகவும் சிறப்பம்சமான விஷயம் இசையமைப்பாளர் இல்லை. படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சியில் என்ன இயற்கையில் என்ன ஒலியோ, அதுதான் திரையிலும் ஒலிக்கிறது.
அதனால் இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள் துவக்கம் முதல் இறுதி வரை அந்த படத்தில் ஒன்றி, திரைக்காட்சிகளுடனே பயணிக்கும் பிரமை ஏற்படுகிறது. சிறுவயதில் இருந்தே சூரி விரும்புகிற பெண், வேறொருவரை காதலித்து விடுகிறார். வீட்டுக்கு அது தெரிந்து, அவரை சரிசெய்து சூரிக்கே திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்கின்றனர்.
காதலில் மனம் குழம்பிய பெண்ணை, பேய் ஓட்டுவதாக சொல்லி ஷேர் ஆட்டோவில் கோவில் பூசாரியிடம் அழைத்து செல்லும் பயணமும், அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும்தான் படத்தின் மையக் கதை. இந்த படம் விருதுக்கான படம் என்பது படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ரசிகர்களுக்கு புரிந்து விடுகிறது.
ஒரு காலில் கட்டப்பட்ட சேவலின் நிலை, கதாநாயகியின் நிலைமையை பிரதிபலிப்பதாக இருக்கிறது. உண்மைக்கு மிக நெருக்கமான இந்த படம் ஒரு யதார்த்த சினிமாவாக இருக்கிறது. சினிமா குறித்த புரிதல் உள்ள ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஒரு நிறைவை, ஆத்ம திருப்தியை தரும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.
ஆனால் 4 பாட்டு, அதிலும் ஒரு குத்தாட்ட பாட்டு, பறந்து பறந்து சண்டை போடும் ஹீரோயிசம் காட்டும் 4 பைட்டு, காமெடி, சென்டிமென்ட் என வழக்கமான கமர்ஷியல் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயமாக திருப்தி தராது. சினிமாத்தனம் இல்லாத சினிமா பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு பொக்கிஷம் போல தெரியும். கமர்ஷியல் சினிமா ஆடியன்ஸ்க்கு இந்த படம் ஏதோ ஒரு அன்னியதனத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.





