தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து சமீபமாக கதாநாயகனாக மாறியிருப்பவர் நடிகர் சூரி. ரஜினி விஜய் அஜீத்குமார் சூர்யா தனுஷ் என முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் காமெடியாக நடித்துக்கொண்டி நடிகர் சூரியை, விடுதலை படம் மூலம் கதாநாயகனாக மாற்றியவர் இயக்குனர் வெற்றிமாறன். இந்த படத்தில் கான்ஸ்டபிள் குமரேசன் கேரக்டரில் சூரி வாழ்ந்திருந்தார்.
தொடர்ந்து விடுதலை 2 கருடன் கொட்டுக்காளி மாமன் படங்களில் நடித்த நடிகர் சூரிக்கு கருடன் மாமன் படங்கள் பெரிய வரவேற்பை பெற்ற வெற்றிப் படங்களாக அமைந்தன. இதில் சூரி நடித்த மாமன் படத்துக்கான கதை திரைக்கதையை சூரியே எழுதியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தாய் மாமன் உறவை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது.
கருடன் மாமன் படங்களில் அபார வெற்றிக்கு பிறகு நடிகர் சூரி தனது சம்பளத்தை ரூ. 8 கோடியில் இருந்து ரூ. 15 கோடியாக உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவரே சொந்தமாக தயாரிப்பு நிறுவனமும் துவங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போது மண்டாடி என்ற படத்தில் நடிகர் சூரி நடித்து வருகிறார்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூரி கூறியதாவது, அம்மன் ஓட்டல் பெரிய அளவில் வளர்ந்து வருவதற்கு என் குடும்பத்தினரின் உழைப்புதான் காரணம். இன்று என் பிறந்த நாள். என் தம்பி லட்சுமணனும் நானும் ஒன்றாக பிறந்த இரட்டை பிறவிகள். அதனால் இருவரும் ஒன்றாக கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினோம்.
மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க வந்துள்ளேன். இப்போது மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறேன். ஜல்லிக்கட்டுவை போல கடலில் நடக்கும் ஒரு வீர விளையாட்டுதான் இந்த படம். இதில் மீனவன் கேரக்டரில் நான் நடிக்கிறேன். இந்த படம் நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும். காமெடி நடிகர்கள் பலர் உருவாகி வருகின்றனர். அவர்களுக்கு எனக்கு தந்தது போலவே ரசிகர்கள் வரவேற்பு தர வேண்டும்.
நடிகர் விஜய் மதுரை தவெக மாநாட்டில் பேசியது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பலே. ஆனால் எதுவாக இருந்தாலும் நல்லவிதமாக அரசியலை தாண்டி எல்லோரும் எல்லாத்துக்கும் வேண்டும். எல்லாத்துக்கும் எல்லோரையும் மதிக்கணும். கண்டிப்பாக அது ரொம்ப முக்கியம். நடிகர் விஜய் அரசியலுக்கு சென்றது அவரது விருப்பம். மீண்டும் அவர் விரும்பினால் நடிக்க வரலாம். எல்லோருக்கும் அவரை ரொம்ப பிடிக்கும். எனக்கும் அவரை பிடிக்கும். அவருக்கும் என்னை பிடிக்கும் என்று நடிகர் சூரி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





