- Advertisement -
Homeபொழுதுபோக்குதேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்கள் மீது கரிசனம் வருமா? பாஜக அரசுக்கு தமிழக வெற்றிக் கழகம்...

தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்கள் மீது கரிசனம் வருமா? பாஜக அரசுக்கு தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் கேள்வி!

- Advertisement -

மத்தியில் ஆளும் பாஜக அரசு, கேஸ் சிலிண்டர் விலையை ரூ. 50 உயர்த்தியுள்ளது. இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவு அறிக்கையில் கூறியிருப்பதாவது, மக்களை வதைக்கும் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் விலை உயர்வு சாமானிய மக்கள் மீதான நேரடி தாக்குதலாகும்.

மக்களின் அன்றாட வாழ்வே போராட்டமாக இருக்கிற சூழலில் ஒன்றிய அரசின் இந்த விலை ஏற்றம் மக்களை மேலும் வாட்டி வதைப்பதாகவே உள்ளது. ஒவ்வொரு முறையும் சமையல் எரிவாயு வாங்கும்போது அதற்கான மானிய தொகை வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பை காற்றில் பறக்கவிட்ட ஒன்றிய ஆட்சியாளர்கள் மக்களை எளிதில் ஏமாற்றி விடலாம் என்று நினைப்பில் உள்ளனர்.

- Advertisement -

தற்போது அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்துவிட்ட நிலையில் மக்களுக்கு பொருளாதார சுமையை ஏற்றும் வகையில், சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தி இருப்பது ஏற்புடையது இல்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சமையல் எரிவாயு விலையை குறைப்பதும் தேர்தலுக்குப் பின்னர் விலையை ஏற்றுவதும் வாடிக்கையாக வைத்துள்ள ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்ட காத்திருக்கிறார்கள்.

உலகச் சந்தையில் கச்சா எண்ணை விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது. அந்த பயனை ஒரு சிலர் மட்டுமே அனுபவிக்க அனைத்து சலுகைகளையும் வழங்கி வரும் ஒன்றிய அரசுக்கு மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது வரும்? தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்கள் மீது கரிசனம் வருமா? ஒன்றிய அரசு இவ்வாறு இருக்க கடந்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக கேஸ் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியம் கொடுப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தது திமுக அரசு.

- Advertisement -

ஆனால் 4 ஆண்டுகளைக் கடந்தும் எதுவும் செய்யவில்லை. தேர்தல் வெற்றிக்காக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து பின்னர் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஏமாற்றி வருகிறது. இந்த போக்கை திமுக அரசு எப்போது நிறுத்தும் என்று மக்கள் கேட்கிறார்கள். பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி வதைப்பதில் ஒன்றிய பாஜக அரசும் திமுக அரசும் இணைந்த கைகளாகவும் ,இரட்டைக்குழல் துப்பாக்கியாவும் செயல்படுகின்றன.

சாமானிய மக்களை பெரிதும் பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இந்த விஷயத்தில் ஒன்றிய அரசின் மீது பழி போட்டு தப்பித்து விடலாம் என்று நினைப்பில் இருக்கும் திமுக அரசு இந்த நேரத்தில் மனசாட்சிப்படி தேர்தல் அறிக்கையில் அறிவித்த சமையல் எரிவாயு மானிய வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும். மீண்டும் மீண்டும் பொய் சொல்லி ஏமாற்றும் வழக்கத்துடன் செயல்படும் ஒன்றிய பாஜக அரசு மற்றும் திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தின் எதிர்வினை மிக தீவிரமாக இருக்கும். மக்களோடு தமிழக வெற்றிக் கழகம் களத்தில் நிற்கும் என்று நடிகர் விஜய் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்