ஒரு மனிதன் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் முன்னேறி எந்த உச்சத்துக்கு போனாலும் பெயர் புகழ் செல்வாக்கு என ஆடம்பரமான வாழ்க்கைக்கு மாறினாலும் தனது கடந்த காலத்தை குறிப்பாக அப்போது பட்ட கஷ்டங்களை துன்பங்களை சிறிதும் மறக்க கூடாது. அப்போதுதான் அந்த புகழும் செல்வமும் அவர்களை தடுமாறாமல் சரியாக வாழ வைக்கும்.
ஆனால் பெரும்பாலானவர்கள் செல்வம் புகழ் என வந்த பிறகு தங்களது கடந்த காலத்தை மறந்து விட்டு இஷ்டம் போல வாழ்கிறார்கள். ஓவராக ஆட்டம் போடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களுக்கான அழிவை அவர்களே தேடிக்கொள்கிறார்கள். ஆனால் இதில் ஒரு சிலர் மட்டும் எப்போதுமே விழிப்புணர்வாக இருந்து தங்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்கிறார்கள்.
அப்படி தமிழ் சினிமாவில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். அவரது உயரம் செல்வாக்கு அந்தஸ்து எல்லாமே வெளிப்படையாக தெரியும். ஆனால் புகழின் உச்சத்தில் இருந்தாலும் அவரிடம் இருக்கும் பணிவும் அடக்கமும் மற்றவர்களை மரியாதையாக நடத்தும் விதமும் வறுமையான தனது கடந்த காலத்தை அவர் சிறிதும் மறக்கவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.
அந்த வரிசையில் நடிகர் சூரியும் இப்போது தமிழ் சினிமாவில் ஒரு வளரும் நடிகராக தொடர்ந்து வெற்றிப் படங்களை கொண்டு முன்னணிக்கு வந்துக்கொண்டு இருக்கிறார். நல்ல படங்கள் நல்ல கேரக்டர்கள் என அவர் தொடர்ந்து நடித்தால் நிச்சயமாக அவரும் ஒரு நாள் நட்சத்திர நடிகராக மாறிவிடுவார். அதற்கான உழைப்பும் திறமையும் அவருக்கு இருப்பதை அவரது படங்கள் வெளிப்படுத்துகின்றன.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சூரி பேசியதாவது, நடிகராக வாய்ப்பு கிடைக்காத போது நான் சென்னையில் பெயிண்டர் வேலை பார்த்தேன். அப்போது பல கட்டடங்களுக்கு பெயிண்ட் அடித்தேன். அப்படி ஒரு கட்டடத்தில் பெயிண்ட் அடித்துவிட்டு மதியம் எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது அந்த ஓனர் வருகிறார் என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த எங்களை எல்லாம் எழுந்து அந்த பக்கமாக போங்க என விரட்டினார்கள். ஒருவர் என் சாப்பாட்டு இலையை பிடித்து இழுத்து தள்ளிப் போட்டார்.
இப்போது அந்த கட்டடம் ஒரு பெரிய ஜவுளிக்கடையாக உள்ளது. சமீபத்தில் அங்கு குடும்பத்துடன் துணி எடுக்க சென்றோம். என்னை பார்க்க கூட்டம் அதிகரித்து விட்டது. அப்போது என் சாப்பாட்டு இலையை இழுத்து போட்ட அந்த மேனேஜர் வந்து, சார் நீங்க எம்டி சார் ரூம்ல உட்காருங்க. கூட்டம் அதிகமாகுது. அங்க டிரஸ்சை எல்லாம் கொண்டு வந்து காட்டச் சொல்றேன்னு சொன்னார். அவருக்கு என்னை அடையாளம் தெரியலே, ஆனா எனக்கு அவரை நல்லா தெரிஞ்சது. ஆனாலும் நான் எதுவும் அவர்கிட்ட சொல்லலே என்று நடிகர் சூரி கூறியிருக்கிறார்.





