போராட்டம்தான் வாழ்க்கை… ஆனால் உழைப்பை மூலதனமாக்கி விடாமல் முயற்சித்தால் வெற்றியை நோக்கி வேகமாக ஓடினால் என்றாவது ஒருநாள் வெற்றி வசப்படும் என்பதற்கு வெற்றியாளர்கள் பலரை உதாரணமாக சொல்லலாம். அதில் சமீபத்திய உதாரணமாக நடிகர் சூரியை தாராளமாக சொல்லலாம்.
ஆரம்பத்தில் திருப்பூரில் பனியன் கம்பெனி தொழிலாளி வேலை பார்த்த சூரி, தினமும் வாங்கியது 20 ரூபாய் சம்பளம்தான். வாரத்தில் 7 நாட்களுக்கு ரூ. 140 சம்பளம் வாங்கி அதில் 70 ரூபாயை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மீதி 70 ரூபாயை தனது செலவுக்கு வைத்துக்கொள்வாராம். இப்படி 7 ஆண்டுகள் திருப்பூரில் இருந்த பிறகு தான் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு போயிருக்கிறார்.
திருப்பூரில் நடிகர் சூரி வாழ்ந்த போது கையில் இருந்த 70 ரூபாய் தினமும் தேங்காய் பன் சாப்பிட அவர் செலவு செய்ய தடுமாறிய அந்த கதையை சமீபத்தில் திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் சூரி பேசிய போது, பேச பேச அவரே நெகிழ்ந்து போய்விட்டார். அப்படிப்பட்ட எனக்கு இன்று திருப்பூரில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது என்றும் பெருமிதமாக பேசி மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஆரம்பத்தில் அழகான நாட்கள் தீபாவளி காதல் வின்னர் போன்ற சில படங்களில் தலை மட்டுமே காட்டிய நடிகர் சூரிக்கு வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் பரோட்டா சாப்பிடும் பந்தய காட்சியை அவரது சினிமா வாழ்வில் அடையாளத்தை ஏற்படுத்தி தந்தவர் இயக்குனர் சுசீந்திரன். அதில் இருந்து நடிகர் சூரிக்கு வெற்றி முகம்தான். ரஜினி விஜய் அஜீத்குமார் சூர்யா சிவகார்த்திகேயன் தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் காமெடி நடிகராக முன்னேறினார்.
சீமராஜா படத்தில் ஒரு காட்சியில் சிக்ஸ்பேக் உடலமைப்புடன் காணப்பட்ட நடிகர் சூரியை பார்த்த இயக்குனர் வெற்றிமாறன், தனது விடுதலை படத்தில் சூரியை கதாநாயகனாக மாற்றினார். ஆரம்பத்தில் துணை நடிகர் பிறகு காமெடி நடிகர் இப்போது கதாநாயகன் என படிப்படியாக உயர்ந்த நடிகர் சூரி மாமன் படம் மூலம் கதாசிரியர் ஆகி விட்டார். விரைவில் தன் அப்பா கதையை இயக்கி நடிக்கும் திட்டமும் அவருக்கு இருப்பதால் டைரக்டரும் ஆகி விடுவார்.
இந்த சூழலில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சூரியிடம் நீங்கள் வில்லனாக நடிப்பீர்களா என்ற அதிரடியான ஒரு கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சற்றும் யோசிக்காமல் உடனடியாக நடிகர் சூரி பதில் தந்திருக்கிறார். நடிகர் சூரி கூறுகையில், இதுவரை வில்லனாக நடிக்க எந்த படத்திலும் வாய்ப்பு வரவில்லை. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக வில்லனாக நடிப்பேன் என்று அசத்தலான பதிலை சூரி தந்திருக்கிறார்.





