இசைத்துறையில் பாடும் வானம்பாடியாக பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர் எஸ்பி பாலசுப்ரமணியம். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என அவரது குரலில் ஒலித்த பாடல்கள் இப்போதும் சாகாவரம் பெற்ற பாடல்களாக இசை உலகில் வாழ்ந்துக்கொண்டே இருக்கின்றன. எஸ்பிபி சாதனைகளுக்கு அப்பாற்றப்பட்ட ஒரு சரித்திர கலைஞனாக வாழ்ந்து மறைந்தவர்.
பாடும் நிலா பாலு என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட பாடகர் எஸ்பிபிக்கு எஸ்பி சைலஜா என்ற சகோதரி இருக்கிறார். அவரும் பிரபல பின்னணி பாடகியாக பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர். எஸ்பிபியின் மகன் சரணும் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி பாடகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எஸ்பி பாலசுப்ரமணியத்தின் சகோதரி எஸ்பி சைலஜாவின் கணவர்தான் சுபலேகா சுதாகர். இவர் பல திரைப்படங்களில் பல டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கமல்ஹாசன் அர்ஜூன் இணைந்து நடித்த குருதிப்புனல் படத்தில் தீவிரவாத கும்பலை சேர்ந்தவராக நடித்திருப்பார். கவுதமியை ஒரு காட்சியில் கற்பழிக்க முயற்சித்து சுட்டு கொல்லப்படுவார்.
டிவி சேனல்களில் ஒளிபரப்பான அண்ணி சித்தி கோலங்கள் தென்றல் போன்ற டிவி சீரியல்களில் சுபலேகா சுதாகர் நடித்திருக்கிறார். சுபலேகா என்ற படத்தில் நடிகராக அறிமுகமானனதால் சுபலேகா சுதாகர் என்றே சினிமா துறையில் இவர் அழைக்கப்படுகிறார். கடந்த 1989ம் ஆண்டில் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் சகோதரி எஸ்பி சைலஜாவை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு மகன் ஒருவர் இருக்கிறார்.
பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம், இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த சூழலில், கடந்த 2020 ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பிறகு குணமடைந்த நிலையில் திடீரென உயிரிழந்தார். 74 வயதில் அவரது மறைவு என்பது இசைத்துறைக்கு பெரிய இழப்பாக இருந்தது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சுபலேகா சுதாகர் கூறியதாவது, எஸ்பிபி என் மைத்துனராக இருந்தாலும் நான் அவரை சார் என்றுதான் அழைப்பேன். கோவித் சமயத்தில் சீரியல் ஷூட்டிங் ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்தது. எஸ்பிபி அங்க வர வேண்டி இருந்ததால் சூழல் எப்படி இருக்குதுன்னு என்னிடம் கேட்டார். எங்களுக்கே இங்கே இவ்வளவு பாதுகாப்பு இருக்கு, உங்களுக்கு இன்னும் நிறைய இருக்கும் என்று சொன்னேன். அவர் அதை நம்பித்தான் அங்கு வந்தார். ஆனால் அந்த நம்பிக்கை வீணாப் போச்சு. இந்த உலகத்தை விட்டு நான் போற வரைக்கும் அந்த குற்ற உணர்ச்சி எனக்கு நிரந்தரமாக இருக்கும் என்று நடிகர் சுபலேகா சுதாகர் வருத்தமாக கூறியிருக்கிறார்.





