தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்த படம் கங்குவா. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யூ வி கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கங்குவா படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
வீரம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களை தொடர்ந்து பிரபல ஒளிப்பதிவாளர் வெற்றி, கங்குவா படத்தில் ஒளிப்பதிவாளராக பணிசெய்துள்ளார். கங்குவா படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் கங்குவா படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
வருகிற 14ம் தேதி உலகம் முழுவதும் 11, 500 திரையரங்குகளில் கங்குவா படம் வெளியாக உள்ளது. தமிழ் இந்தி மலையாளம் தெலுங்கு கன்னடம் உருது பெங்காலி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகும் கங்குவா படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பும், ஆவலும் ஏற்பட்டுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்துக்குப் பிறகு 2.5 ஆண்டுகள் கழித்து சூர்யா நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் சூர்யா ரசிகர்கள் கங்குவா படத்தை வரவேற்றுக் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இதற்கிடையே கங்குவா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக மும்பை, புதுடெல்லி, கேரளா, ஐதராபாத் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று பிரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் பங்கேற்று வருகின்றனர். 2 தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் கங்குவா படத்தின் பிரமோஷன் நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி பங்கேற்றார். முன்னதாக நடிகர் சூர்யா, கங்குவா பற்றி பேசியிருந்தார்.
அடுத்து, இயக்குனர் ராஜமௌலி பேசுகையில், பாகுபலி படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டதாக சூர்யா இங்கு பேசும்போது குறிப்பிட்டு கூறினார். உண்மையில் நான்தான் சூர்யாவுடன் பணியாற்றும் வாய்ப்பை இழந்துவிட்டேன். காரணம் எனக்கு சூர்யாவை அவ்வளவு பிடிக்கும். குறிப்பாக சூர்யாவின் நடிப்பு, திரையில் தோன்றும் விதம் அனைத்தும் மிகச் சிறப்பாக இருப்பதால் அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.
பாகுபலி படத்தில் நடிக்கவில்லை என்று சூர்யா எடுத்த முடிவை நான் மிகவும் மதிக்கிறேன். ஏனென்றால் அவர் படத்தின் இயக்குனர் யார் என்பதையும் மீறி, கதை எப்படி இருக்கிறது என்று பார்த்தார். அதனால் ராஜமௌலி இயக்கும் படமாக இருந்தாலும், கதை பிடித்தால் மட்டுமே நான் ஏற்றுக் கொள்வேன் என்று அவர் பாகுபலி படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்று கூறினார். சூர்யா முன்னிலையில் இயக்குனர் ராஜமௌலி இப்படி உண்மையைப் போட்டுடைத்தது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





