நடிகர் சூர்யா நடிப்பில் கடந்தாண்டில் வெளியான படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில், ஞானவேல் ராஜா தயாரிப்பில் மெகா பட்ஜெட்டில் உருவான இந்த படம் பலத்த தோல்வியை சந்தித்தது. பல நூறு கோடி ரூபாய் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. கங்குவா படத்தின் தோல்வி நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது.
இதையடுத்து நடிகர் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். அடுத்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படமும் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.
இந்நிலையில் கங்குவா படம் கொடுத்த பலத்த நஷ்டத்தை ஈடுகட்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிக்கும் 2 படங்களில் நடிக்க நடிகர் சூர்யா ஒப்புதல் அளித்து அக்ரிமென்டில் கையெழுத்திட்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த 2 படங்களிலும் நடித்து அந்த வெற்றிப் படங்கள் மூலம் கங்குவா படம் நஷ்டத்தை ஈடுகட்ட சூர்யா முடிவு செய்திருக்கிறார்.
ஏற்கனவே மலையாள பட இயக்குனர் பசில் ஜோசப் மற்றும் தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நடிகர் சூர்யா அவர்களது இயக்கத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. ஆனால் ஞானவேல் ராஜா தயாரிக்கும் படங்களை அவர்கள் இருவரும், அல்லது அவர்களில் யாரேனும் ஒருவர் இயக்கப் போகிறாரா என்பது உறுதியாகவில்லை.
இதற்கிடையே வருகிற 2026ம் ஆண்டில் 2ல் ஒரு படத்தின் படப்பிடிப்பை ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஆரம்பிக்க சூர்யா தரப்பில் முடிவு செய்துள்ளனர். அதற்குள் இந்த 2 படங்களில் இயக்குனர்கள், உடன் நடிக்கப் போகும் சக நடிகர்கள் நடிகைகளை தேர்வு செய்ய உள்ளனர். இந்த 2 படங்கள்தான் கங்குவா பட நஷ்டத்தை ஈடுகட்ட போகும் படங்கள் என்று கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் சூர்யா 2 வேடங்களில் நடித்த படம்தான் 24. டைம் டிராவலை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படத்தில் சமந்தா நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் பிளாப் ஆகி பலத்த நஷ்டத்தை சந்தித்தது. இந்த 24 படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டவே கங்குவா படத்தில் நடிக்க நடிகர் சூர்யா ஒப்பந்தம் செய்திருக்கிறார். இப்போது கங்குவா படம் நஷ்டத்தை ஈடுகட்ட மேலும் 2 படங்களில் நடிக்க சூர்யா கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





