நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் பள்ளி மாணவன் போல இருக்கிறார் என விமர்சிக்கப்பட்ட சூர்யாவை ஒரு நல்ல நடிகராக மாற்றியது டைரக்டர் அமீர். மௌனம் பேசியதே படத்தின் மூலம் அவருக்கு நடிப்பை கற்றுக் கொடுத்தார். அடுத்து, இயக்குனர் பாலா நந்தா படத்தின் மூலம் அவரை நாயகனாக மாற்றினார்.
தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய காக்க காக்க, ஏஆர் முருகதாஸ் இயக்கிய கஜினி, விக்ரமன் இயக்கிய உன்னை நினைத்து, ஹரி இயக்கிய சிங்கம், சுதா கொங்காரா இயக்கிய சூரரைப் போற்று உள்ளிட்ட படங்கள், சூர்யாவுக்கு திருப்புமுனை படங்களாக அமைந்தன. வாரணம் ஆயிரம், சில்லுன்னு ஒரு காதல், ஏழாம் அறிவு, பிதாமகன் போன்ற படங்கள் தந்த வெற்றியால், முன்னணி நட்சத்திர நடிகராக சூர்யா மாறினார்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சூர்யாவுக்கு பெரிய அளவில் ஹிட் கொடுத்த படங்கள் எதுவும் இல்லை. அவர் அதிகளவில் எதிர்பார்த்த என்ஜிகே, தானா சேர்ந்த கூட்டம், எதற்கும் துணிந்தவன். காப்பான் போன்ற படங்கள் பெரிய அளவில் தோல்வியை சந்தித்தன. இந்த சூழலில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க வேண்டிய வாடிவாசல் படமும் 2 ஆண்டுகளுக்கு மேலாக படப்பிடிப்பு துவங்காமல் அப்படியே இருக்கிறது.
இதற்கிடையே டைரக்டர் பாலா இயக்கத்தில், வணங்கான் படத்தில் கமிட் ஆகி ஒரு மாதம் படப்பிடிப்பில் பங்கேற்ற சூர்யா, பிறகு பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த படத்தில் இருந்து விலகினார். பிறகு, சுதா கொங்காரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் கமிட் ஆன சூர்யா, திரைக்கதையில் குறுக்கீடு செய்து, டைரக்டருடன் மனக்கசப்பு ஏற்பட்டதால் அந்த படத்தை விட்டும் வெளியேறினார்.
பிறகு கார்த்திக் சுப்பராஜூடன் தனது 44வது படத்தில் நடிக்க இருப்பதாக சூர்யா அறிவித்த நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கியதாக தெரியவில்லை. இந்தியில் கமிட் ஆன கர்ணா படத்திலும் சூர்யா நடிக்கவில்லை. சூர்யா எதிர்பார்ப்பில் இப்போது நம்பிக்கை தரக்கூடிய ஒரே படம், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அவர் நடித்துள்ள கங்குவா படம்தான். அந்த படம் வந்தால் சூர்யாவின் மார்க்கெட் உயர அதிக வாய்ப்புள்ளது.
இந்த சூழலில் தற்போது வெப் சீரிஸ் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் என்பவரது படத்தில் நடிக்க சூர்யா கமிட் ஆகியிருக்கிறார். ஜி5 ஓடிடி தளத்தில் விலங்கு என்ற வெப்சீரிஸை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்தார். விமல், இனியா, பாலா சரவணன், முனிஷ்காந்த் நடித்த இந்த தொடர் 7 அத்யாயங்களாக ஒளிபரப்பானது. திருச்சியில் உள்ள ஓட்டல் ஒன்றில் இதுகுறித்து டிஸ்கஷன் நடந்த நிலையில், 2 டி தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திலாவது சூர்யா நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர்.





