1980களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் வாகை சந்திரசேகர். இவர் பாரதிராஜாவின் “புதிய வார்ப்புகள்” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் வாகை சந்திரசேகர். இவரது தனித்துவமான நடிப்பு பல ரசிகர்களை ஈர்த்தது.

இந்த நிலையில் வாகை சந்திரசேகர், பாரதிராஜாவிடம் தான் வாய்ப்பு கேட்ட விநோதமான முறை குறித்து ஒரு தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.
வாகை சந்திரசேகர் சினிமாவில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்று சென்னைக்கு வந்து வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்த சமயத்தில்தான் “16 வயதினிலே” திரைப்படம் வெளிவந்திருக்கிறது. அத்திரைப்படத்தை பார்த்தபோது, “இது தமிழ் சினிமாவிற்கே மிகவும் புதுமையான படமாக இருக்கிறதே” என்று எண்ணினாராம்.

அதன் பின் பாரதிராஜா வசித்து வந்த இடத்தை கண்டுபிடித்து அவரை சென்று சந்தித்திருக்கிறார். “உங்க படம் நல்லா இருந்தது. உங்களோட அடுத்த படத்துல எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க” என்று கேட்டிருக்கிறார். அதற்கு பாரதிராஜா, “சரி பார்க்கலாம்” என்று கூறினாராம்.
சில நாட்களுக்குப் பிறகு “16 வயதினிலே” ஹிட் அடித்தவுடன் பாரதிராஜா வேறு ஒரு வீட்டிற்கு குடி பெயர்ந்துவிட்டாராம். மிகவும் பிரபலமான இயக்குனராக ஆகிவிட்டிருந்தார் பாரதிராஜா. ஆதலால் அவரை பார்ப்பதே மிகவும் கடினமாக இருந்ததாம்.
வாகை சந்திரசேகரால் அவரை பார்க்கவே முடியவில்லையாம். அங்கிருந்தவர்கள் வீட்டிற்குள்ளேயே விடவில்லையாம். இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் பாரதிராஜா, “கிழக்கே போகும் ரயில்”, “சிகப்பு ரோஜாக்கள்” ஆகிய திரைப்படங்களை இயக்கிவிட்டார். அத்திரைப்படங்களும் மிகப் பெரிய ஹிட் அடித்தன.
வாகை சந்திரசேகரும் அடிக்கடி பாரதிராஜாவை பார்க்க முயன்று அந்த முயற்சியில் தோற்றுக்கொண்டே இருந்தார். இந்த நிலையில் ஒரு நாள் தான் பாரதிராஜாவிடம் அசிஸ்டன்ட்டாக சேரப்போவதாக பொய் சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றாராம். அங்கே பாரதிராஜாவை பார்த்து ஒரு கதை கூறினாராம்.

“இந்த கதை நன்றாக இருக்கிறது. என்னிடம் உதவி இயக்குனராக சேர்கிறாயா?” என பாரதிராஜா கேட்டிருக்கிறார். ஆனால் வாகை சந்திரசேகரோ, “நடிக்கிறதுக்கு சான்ஸ் கேட்டு வந்தா உள்ள விடமாட்டிக்காங்க. அதனால்தான் அசிஸ்டன்ட்டா சேரப்போறேன்னு பொய் சொல்லிவிட்டு வந்தேன். ஆனால் நான் உங்க படத்துல நடிக்கனும், அடுத்த படத்துல எனக்கு ஒரு சின்ன வாய்ப்பாவது கொடுங்க” என கேட்டிருக்கிறார்.
பாரதிராஜாவும், “சரி பார்க்கலாம்” என்று கூறினாராம். இந்த முறை நிச்சயமாக பாரதிராஜா தனக்கு வாய்ப்பு வழங்குவார் என்ற நம்பிக்கையில் வாகை சந்திரசேகர் இருந்தாராம். அவரது வீட்டில் கூட தான் பாரதிராஜா படத்தில் நடிக்கப்போவதாக கூறிவிட்டாராம்.
அதன் பின் சில நாட்கள் கழித்து, பாரதிராஜா “புதிய வார்ப்புகள்” என்ற திரைப்படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பு வந்திருக்கிறது. அப்போது வாகை சந்திரசேகரின் நண்பராக இருந்த மனோபாலா, பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்துவிட்டாராம்.
அந்த சமயத்தில் வாகை சந்திரசேகரின் வீட்டிற்கு வந்த மனோபாலா, வாகை சந்திரசேகரின் தாயாரிடம், “என்ன அவன் பாரதிராஜா படத்துல நடிக்க போறதாக சொல்லிக்கிட்டு இருக்கான். ஆனால் புதிய வார்ப்புகள் படத்தோட லிஸ்ட்ல அவன் பெயரே இல்லையே” என்று கூறியிருக்கிறார்.

உடனே தாயார், வாகை சந்திரசேகரிடம் இதனை கூற, அன்று கொட்டும் மழையில் நனைந்தபடி பாரதிராஜாவின் வீட்டின் முன் போய் நின்றாராம். “என்னய்யா தொப்பு தொப்பா நனைஞ்சிட்டு வந்திருக்க?” என கேட்க, அதற்கு வாகை சந்திரசேகர், “எனக்கு ஒரு படத்துல நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு” என கூறினாராம்.
அதற்கு பாரதிராஜா, “சூப்பர்யா, கைய கொடு, யார் படத்துல?” என கேட்க, “பாரதிராஜா படத்துல” என பாரதிராஜாவிடமே கூறியிருக்கிறார். இதனை கேட்டதும், “என்னய்யா சொல்ற?” என பாரதிராஜா கேட்க, “இவ்வளவு நாள் வாய்ப்பு கேட்டும் கிடைக்கல. இந்த முறை நீங்க கண்டிப்பா என்னைய நடிக்க வைக்கனும். என்ன வேஷம் கொடுத்தாலும் பரவாயில்லை” என கூறினாராம். அவர் பேசியதை கேட்டு வெகுநேரம் யோசித்த பாரதிராஜா, “சரி, நாளைக்கு வந்துடு” என கூறிவிட்டாராம். இவ்வாறுதான் வாகை சந்திரசேகர் “புதிய வார்ப்புகள்” திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.





