நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இன்றைய நிலவரப்படி ஒரு படத்தில் நடிக்க ரூ. 275 கோடி வரை சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் அவர் மட்டும்தான். சீனியர் நடிகர்களான ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகியோர் கூட இதுவரை ரூ. 150 கோடிக்கு மேல் சம்பளத்தை கடந்ததில்லை என்று சொல்லப்படுகிறது. அஜீத்குமார் சம்பளமும் 163 கோடி ரூபாய் என்று தகவல் உள்ளது.
ஆனால் வருகிற ஜனவரியில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள ஜனநாயகன் படத்துடன் அவர் இனிமேல் சினிமாவில் நடிப்பதில்லை என்று ஏற்கனவே அறிவித்து விட்டார். இந்த படத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்லி விட்டு முழுநேர அரசியலில் அவர் முழுகவனம் செலுத்தி வருகிறார். 2026ம் ஆண்டில் நான்தான் முதல்வர் என்றும் மேடைகளில் பேசி வருகிறார்.
நடிகர் விஜய் நடித்த படங்களில் போக்கிரி படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்தது. இந்த படத்தை நடன இயக்குனர் மற்றும் நடிகர் பிரபுதேவா டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தில் அசின் நாயகியாக நடித்திருந்தார். நாசர் பிரகாஷ் ராஜ் ஆனந்தராஜ் ஸ்ரீரஞ்சனி ஸ்ரீமன் தாமு வையாபுரி நெப்போலியன் என பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் நடிகர் விஜய் தோன்றும் போக்கிரி பொங்கல் பாடல் காட்சி பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த பாடலின் இடையே நடிகர் விஜயுடன் படத்தின் இயக்குனர் பிரபுதேவாவுடன் 20 விநாடிகள் வரை இணைந்து ஆடியிருப்பார். இருவரும் நடன அசைவுகளும் ஒன்றுபோலவே இருக்கும். இருவரது காஸ்ட்யூமும் ஒன்றாகவே இருந்தது.
இந்த பாடல் காட்சி குறித்து போக்கிரி படத்தில் நடித்த நடிகர் வையாபுரி ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். அப்போது அவர் கூறியதாவது, போக்கிரி படத்தில் நடித்த போது நாங்கள் விஜய்க்கு நண்பர்களாக நடித்திருந்தோம். அதில் போக்கிரி பொங்கல் என்ற பாடல் காட்சியில் பிரபு தேவா மாஸ்டருடன் நடனம் ஆட வேண்டும் என்று விஜய் ஆசைப்பட்டார். பிரபுதேவாவிடம் நான் நெருக்கமாக பழகுபவன் என்பதால் என்னிடம் அந்த விஷயத்தை விஜய் சொன்னார்.
நானும் ஸ்ரீமனும் இந்த விஷயத்தை பிரபுதேவாவிடம் சொன்னோம். ஆனால் அதற்கு அவர் முதலில் வேண்டாம் என்று கூறிவிட்டார். நானும் விஜயும் ஒன்றாக ஆட வேண்டாம். பாடல் காட்சியில் ஒன்றாக தோன்ற வேண்டாம் என்று மறுத்துவிட்டார். ஆனால் நாங்கள் விடவில்லை. தொடர்ந்து அவரை நச்சரித்துக் கொண்டே இருந்தோம். ஒரு கட்டத்துக்கு பிறகு அவர் விஜயுடன் அந்த காட்சியில் நடனமாட சம்மதித்தார் என்று நடிகர் வையாபுரி கூறியிருக்கிறார்.





