நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு தலைவர் 173 என்ற தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சொந்த செலவில் தயாரிக்கிறது.
தலைவர் 173 படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த் மகனாக மலையாள இயக்குனர் மற்றும் நடிகர் பசில் ஜோசப் நடிக்க கமிட் ஆகியுள்ளார். மேலும் தளபதி சிவா படங்களில் ரஜினியுடன் நடித்த மலையாள நடிகை ஷோபனா மற்றும் சாய்பல்லவியும் இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.
வழக்கமாக டான் படங்களில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், தலைவர் 173 படத்தில் ஃபேமிலி டிராமா சப்ஜெக்ட்டில் நடிக்கிறார். இப்படி ஒரு கதையை அவரே விரும்பி கேட்டு அந்த படத்தில் நடிப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் கடந்தாண்டில் வெளியான லப்பர் பந்து மாமன் 3 பிஎச்கே டூரிஸ்ட் ஃபேமிலி தலைவி தலைவி என பல படங்கள் ஃபேமிலி டிராமாக்களாக இருந்தன.
அதனால் வழக்கமாக பெரிய தாதா அல்லது போலீஸ் அதிகாரி என மாறி மாறி டான் படங்களில் நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு பேமிலி சென்டிமென்டில் நடிக்க விரும்பி தலைவர் 173 படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே முத்து படையப்பா போன்ற ஃபேமிலி டிராமா படங்கள் ரஜினிக்கு பெரிய வெற்றியை கொடுத்தன.
தலைவர் 173 படத்தின் ஷூட்டிங் வருகிற 27ம் தேதி துவங்க உள்ளது. சென்னை பூந்தமல்லியில் உள்ள சுந்தர் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட ஷெட்டில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. படத்தின் 75 சதவீத காட்சிகளை இங்குதான் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஷெட்டுக்கு உள்ளேயும் ஷெட்டுக்கு வெளியேயும் மாறி மாறி படப்பிடிப்பு நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் 75 வயதான நிலையில் ஹீரோவாக நடித்து வருகிறார். இனியும் சண்டை காட்சிகள் வெளியூர் படப்பிடிப்புகள் அடிக்கடி லொக்கேஷன் சேஞ்ச் என அவரை அலைக்கழிப்பது உடல் ரீதியாக மனம் ரீதியாக அவருக்கு பாதிப்பை தரும் என்பதால் இந்த படத்தை அவரை சிரமப்படுத்தாமல் எடுத்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அத்துடன் ரஜினியும் இனி இதுபோன்ற சிம்பிளான குடும்ப கதைகளில் நடிக்கும் பாணிக்கு மாற உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.





