தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும், அதை தன்னை இயல்பாக பொருத்திக்கொண்டு நடிக்கும் ஆற்றல், சில நடிகர்களுக்கு மட்டுமே இருக்கிறது. அதில் நடிகர் விதார்த்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கமர்ஷியல் படம் இயக்க ஆசைப்படும் பெரும்பாலான இயக்குனர்களுக்கு விதார்த் போன்ற யதார்த்த நடிகர்களின் அருமை புரிவதில்லை.
இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் சுருளி கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விதார்த். அதுவரை பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்த அவர், மைனா படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில்தான் அமலாபால் அறிமுக நடிகையானார்.
மைனா படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு விதார்த் பல படங்களில் நடித்தார். அதுவும் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்ததால், ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றார். விதார்த் நடித்த குற்றமே தண்டனை, காற்றின் மொழி, ஆயிரம் பொற்காசுகள், ஜன்னல் ஓரம், ஒரு கிடாயின் கருணை மனு, குய்கோ, வீரம், குரங்கு பொம்மை உள்ளிட்ட பல படங்களில் அவரது நடிப்பு அதிக கவனம் பெற்றது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகர் விதார்த் கூறியதாவது. சென்னையில் வீடு கிடைப்பது என்பது அவ்வளவு ஈஸி கிடையாது. வீடு கேட்டுப் போனா, அய்யோ, நீங்க ரொம்ப நல்ல ஆக்டர், உங்க கூட ஒரு செல்பி போட்டோ எடுத்துக்கட்டுமான்னு எல்லாம் கேட்பாங்க. ஆனால் வீடு மட்டும் தர மாட்டாங்க. பெசண்ட் நகர்ல குழந்தையை ஸ்கூலில் சேர்க்க வேண்டும் என்பதால், பெசண்ட் நகரில் வீடு தேடினோம்.
அதற்காக ஆறு மாசம் வீடு தேடி அலைஞ்சோம். அது கோவித் காலகட்டம். அதனால் ஷூட்டிங் இல்லாத நாட்களில் நானும் என் மனைவியும் காலை டிபன், மதியம் லஞ்ச் எல்லாம் பிரிப்பேர் பண்ணி பார்சல் எடுத்துக்கிட்டு, காரில் கிளம்பி போய் பெசண்ட் நகர் ஏரியாவில் வீடு தேடினோம். அங்கேதான் குழந்தையை ஸ்கூல்ல சேர்க்க ஆசைப்பட்டோம்.
அப்போ வழியில் வீடு வாடகைக்கு போர்டு இருந்தால், அங்கே போய் விசாரிப்போம். இல்லேன்னா அந்த ஏரியாவில் இருக்கிற வீட்டு புரோக்கர்கள் கிட்ட பேசி, வீடு கிடைக்குதான்னு பார்ப்போம். காரை நிறுத்தி டிபன், லஞ்ச் சாப்பிடுவோம். அப்போது என் மகள் 3 வயது கைக்குழந்தையாக இருந்தது. நடிகர்ன்னா சென்னையில் வீடு கிடைக்கறதே கஷ்டம் என்று நடிகர் விதார்த் யதார்த்தத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





