நடிகர் சூர்யா நடித்த 44வது படம் ரெட்ரோ. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார். 2டி எண்டர்யெின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் ஆகிய 2 நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தன. சந்தோஷ் நாராயணன் படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் நாயகனாக சூர்யா நாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தனர்.
மேலும் ரெட்ரோ படத்தில் நடிகர்கள் ஜெயராம் நாசர் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். கடந்த மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று ரெட்ரோ படம் உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் வெளியானது. முதல் நாள் முதல் காட்சியிலிருந்து ரெட்ரோ படத்திற்கு ரசிகர் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
ரெட்ரோ படம் ரிலீஸ் முதல் நாளில் தியேட்டர்களில் படம் பார்த்த பலரும் படத்தை எதிர்மறையாகவே விமர்சித்தனர். முதல் சில நாட்கள் படத்தின் வசூல் சுமாராகவே இருந்து வந்ததாக தகவல்கள் வெளியாயின. படம் ரிலீஸான மறுநாள் 2ம் தேதியன்று உலகம் முழுவதும் 17.75 கோடி ரூபாய் வசூல் என படக்குழு அறிவித்த நிலையில் அதற்கு அடுத்த 4 நாட்களும் படத்தின் வசூல் குறித்த எந்த நிலவரமும் வெளியாகவில்லை.
இந்நிலையில் நேற்று மாலை ரெட்ரோ படம் 104 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு தரப்பிலிருந்து போஸ்டர் வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். விமர்சன ரீதியாக ரசிகர்களுக்கு இந்த படம் திருப்தியை தரவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிய வருகிறது. குறிப்பாக கதை திரைக்கதையில் வழக்கம் போல கார்த்திக் சுப்பராஜ் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை என்றும் கூறுகின்றனர்.
ஆனாலும் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ரெட்ரோ மிகச்சிறந்த படம். வேண்டும் என்றே சிலர் இந்த படத்திற்கு எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகின்றனர். தியேட்டர்களில் படம் பார்க்கும்போது ரசிகர்களின் ஆரவாரமும் உற்சாகமும் இந்த படம் குறித்த உண்மையான நிலையை சொல்கிறது என்றும் கூறியிருந்தார். ஆன்லைன் விமர்சனங்களை படிக்கவே கூடாது என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் ரெட்ரோ படம் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரெட்ரோ படம் வெளியான பிறகு நடிகர் சூர்யா சென்னையில் இல்லாமல் மும்பைக்கு புறப்பட்டு சென்று விட்டார். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் மட்டுமே சில தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து உற்சாகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.





