நடிகர் விஜய் ஆண்டனி, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். துவக்கத்தில் இசையமைப்பாளராக தனது சினிமா பயணத்தை துவங்கிய அவர், அதற்கு பின் நடிகராகவும் மாறினார். திமிரு புடிச்சவன், பிச்சைக்காரன், நான், எமன், கொலைகாரன், கோடியில் ஒருவன் போன்ற பல படங்களில் நடித்தார். தொடர்ந்தும் படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த வாரத்தில், விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம், தமிழ் சினிமாவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில வாரங்களுக்கு முன்புதான் பிரபல நடிகர் மாரிமுத்து, திடீரென மறைந்த நிலையில், 16 வயதான, பிளஸ் 2 மாணவி மீராவின் தற்கொலை பதைபதைப்பை ஏற்படுத்தியது.
தனது மகளின் மறைவால், மிகவும் மனம் உடைந்து போன நிலையில் இருந்த விஜய் ஆண்டனி, நேற்று முதன்முறையாக ஒரு நிகழ்ச்சியில் தனது இளைய மகள் லாராவுடன் கலந்துகொண்டனர். இயக்குநர் அமுதன் இயக்கத்தில், ரத்தம் என்ற படத்தில், விஜய் ஆண்டனி, ஹீரோவாக நடித்திருக்கிறார். அந்த படத்தின் பிரஸ் மீட்டில் விஜய் ஆண்டனி, தனது மகள் லாராவுடன் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில், நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது, இசை பற்றி முழுமையாக தெரியாமல், முறையாக இசையை கற்றுக்கொள்ளாமல், சினிமாவில் இசையமைக்க வந்தவன் நான். படத்தின் இயக்குநர் அமுதனின் தந்தை, எனக்கு இசை கற்றுத்தர எவ்வளவோ முயற்சித்தார். ஆனால், நான் கற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அவர் எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்.
தமிழ்படம் போன்ற காமெடி படங்களை தந்த அமுதன், ஸ்டார் வேல்யூ உள்ள ஹீரோக்களுக்கான படங்களும் எடுக்கத் தெரிந்தவர் என்பதை நான் அறிவேன். அதற்கான நம்பக தன்மை கொண்ட அவர் மீது, மிகப்பெரிய மரியாதை உள்ளது. கடந்த 10 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகுதான், அவரது இந்த படத்தில் நான் நடிக்க முடிந்தது. அவர் பல முறை அழைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை, எனக்காக அவர் 10 ஆண்டுகள் வரை காத்திருந்தார், என்றார்.
இந்த விழாவில் பேசிய ரத்தம் படத்தின் இயக்குநர் அமுதன், இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி மிகவும் சந்தோஷமாக, உற்சாகமாகவும் நடக்க வேண்டும். ஆனால், இது அப்படி நடக்கவில்லை. இதுபோன்ற ஒரு படத்தில் நடிக்க தைரியம் வேண்டும், என் தந்தை இறந்த போது, எனக்கு ஆறுதல் சொல்ல விஜய் ஆண்டனி என் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது என்னிடம், பயப்படாதீங்க, நாங்க எல்லாம் உங்க கூட இருக்கோம் என்றார். அதே வார்த்தைகளை தான் நானும் சொல்லுகிறேன், ‘ நாங்க எப்பவும் உங்க கூட இருக்கோம் சார், என்றார்.





